
காய்கறி கார போளி
தேவை:
கேரட் துருவல் – கால் கப், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்,
முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப்,
கோதுமை மாவு – ஒன்றரை கப்,
பால் – அரை கப்,
பட்டை – 2 துண்டு,
சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும். சூப்பர் சுவையில் வெஜிடபிள் கார போளி தயார்.
*****
சப்போட்டா கொழுக்கட்டை
தேவை:
பச்சரிசி - 1/4 கிலோ,
வெல்லம் - 100 கிராம்,
சப்போட்டா - 4,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
முதலில் தேங்காயை துருவிக்கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரிசியை ஒருமணி நேரம் ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும்.
வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும்.அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். சுவையான சப்போட்டா கொழுக்கட்டை தயார்.