
இட்லி செய்ய மாவு போதவில்லையா? ஒரு கப் இட்லி மாவுடன் அரைக்கப் ஊறவைத்த ஓட்ஸ் கலந்து இட்லி வார்த்தால் நார்ச்சத்து அடங்கிய சத்தான இட்லி ரெடி.
பிரட் உப்புமா செய்யும்போது முதலில் பிரட்டின் மீது வெண்ணைய் தடவி, இட்லி மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, பின்னர் உங்கள் வழக்கப்படி உப்புமா தயாரித்தால், வெண்ணெய் உருகி எல்லா இடங்களிலும் ஒரே சீராக பரவியிருக்கும்.
தயிர்வடை, அல்லது தயிர் பச்சடியில் சேர்க்க பூந்தி செய்ய வேண்டுமா? கடலைமாவைக் கரைத்துக்கொண்டு எலுமிச்சம்பழம் பிழியும் கருவியில் ஊற்றிப் பொரித்தால் சின்ன சின்ன சைஸ் பூந்தி கிடைக்கும்.
சேப்பங்கிழங்குகளை நன்கு கழுவி, வட்டத்துண்டுகளாக வெட்டி இட்லித்தட்டில் வேகவைத்து எடுத்து உரித்தால், வழுவழுப்புத்தன்மை அதிகமில்லாமல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு டீஸ்பூன் மைதாமாவு, இரண்டு டீஸ்பூன் கார்ன்ஃப்ளவர், கொஞ்சம் உப்பு சேர்த்து பஜ்ஜிமாவு பதத்துக்குக்கலந்துகொள்ளவும். இதில் சாண்ட் விச், டோஸ்ட் செய்யும்போது வெட்டி எடுத்த பிரட் ஓரங்களை முக்கி எண்ணெயில் பொரித்து நீள நீள ஃபிங்கர் சிப்ஸ் செய்யலாம்.
துருவிய கேரட் அல்லது துருவிய தேங்காயை இட்லித்தட்டில் உள்ள குழிகளில் பரப்பி, அவற்றின் மேல் இடியாப்பம் பிழிந்து, அல்லது இட்லி வார்த்து வேகவைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
அப்பளம், வற்றல் வகைகள், மிளகாய் போன்ற உணவுப் பொருட்களை வெயிலில் காயவைக்கும்போது, ஒரு தட்டில் இவற்றை பரப்பி, ஒரு பலகையின் மேல் வைத்து, பாத்திரங்கள் தேய்த்து வடிக்க வைக்கும் இரும்புக்கூடையை மேலே கவிழ்த்து வையுங்கள். காக்கை, மற்று சிறு பறவைகள் தொல்லை இருக்காது என்பதுடன் இலைகள், தழைகள் போன்ற குப்பைகளும் காயவைக்கும் உணவு பொருட்களில் வீழாது.
கோதுமை மாவில் பிஸ்கட்டுகள் செய்யும்போது மாவை சப்பாத்தியாக தேய்த்து, அதன்மேல் எலுமிச்சம் பழம் பிழியும் கருவியை வைத்து அழுத்தினால் வட்ட வட்டமான புள்ளிகளுடன் கூடிய டிசைன் கிடைக்கும். இதைப் பொரித்தால் அழகான டிசைனுடன் கூடிய பிஸ்கட்டுகள் ரெடி.
ஈரம் இல்லாத கொத்தமல்லி, கறிவேப்பிலை, துளசிஇலை போன்றவற்றை ஜிப் லாக்கர் கவர்களில் போட்டு ஃ ப்ரிட்ஜில் வைத்தால் பல நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.
வெண்பொங்கல் செய்யும்போது அரிசியை அப்படியே போடாமல், மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்து, பின்னர் வறுத்த பயத்தம் பருப்பும், பெருங்காயத்தூளும் சேர்த்து வேகவிடுங்கள். பின்னர் வழக்கம்போல நெய்யில் கறிவேப்பிலை, மிளகு, ஜீரகம், முந்திரி போட்டு தாளித்தால் சுவையான வெண்பொங்கல் தயார்.
பசலைக்கீரையை சுத்தம் செய்து சுமார் பத்து நிமிடங்கள் வெயிலில் உலர்த்திய பிறகு சமைத்தால் கொழு கொழுப்புத்தன்மை இருக்காது.
இட்லி, தோசை போன்ற பலகாரங்களுக்கு மிக்ஸியில் மாவு அரைக்க போறீங்களா? புழுங்கல் அரிசியை வெந்நீரில் ஊறவையுங்கள். கிரைண்டரைப் போலவே சுலபமாக அரைபடும்.