
அரைக்கீரைக் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
அரைக்கீரை- ஒரு கட்டு
சின்ன வெங்காயம் உரித்து அரிந்தது- 15
பூண்டு பற்கள் –ஐந்து
பச்சை மிளகாய்- அரிந்தது மூன்று
பச்சைப் பட்டாணி உரித்தது- ஒரு கைப்பிடி அளவு
வேர்க்கடலை- கைப்பிடி அளவு
கடலைப்பருப்பும், சிறு பருப்பும் சேர்த்து -கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
சீரகம் தாளிப்பதற்கு- தேவையான அளவு
தேங்காய்த் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சீரகத்தை வெடிக்கவிடவும். பின்னர் வேர்க்கடலை, மற்றும் பருப்புகளை வறுத்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். அடங்கியதும் சாம்பார்பொடி, துருவி அரைத்த தேங்காய் விழுது மற்றும் கீரை அனைத்தையும் சேர்த்து வதக்கி நன்றாக வேகவிட்டு குக்கரில் சவுண்ட் வருவதற்கு முன்பாக நிறுத்திவிடவும். அப்பொழுது கீரை பசுமை மாறாமல் இருக்கும். இந்தக் கூட்டை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
ராகி பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி -தலாஒரு கப்
வெந்தயம்- ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
ராகி மாவு -ஒரு கப்
வெல்லம் -ஒன்னரை கப்
எண்ணெய் பொரிக்க -தேவையான அளவு.
செய்முறை:
அரிசி , பருப்பு , வெந்தயம் அனைத்தையும் ஊறவைத்து நைசாக ஒரு கல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ராகி மாவையும் சேர்த்து அரைத்து முக்கால் திட்டம் புளிக்க விடவும். வெல்லத் துருவலை கரைத்து கல், மண் நீக்கி வடிகட்டி புளித்த மாவுடன் சேர்த்து, ஏலப்பொடி, பல் பல்லாக சீவிய தேங்காய் அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு, பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, விருப்பப்பட்ட அளவுக்கு மாவை ஊற்றி இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து வைக்கவும்.
குண்டு குண்டாக பார்ப்பதற்கு அழகாகவும், ருசிப்பதற்கு சுவையுடன் ரசனையாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும் இந்த பணியாரம். அதிகம் புளிக்கவிடாமல் செய்வதால் இரும்பு கடாயில் ஊற்றினாலும் ஆஷிக் கொள்ளாமல் எடுக்கமுடியும்.