இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் உள்ளூர் சுவைக்கு ஏற்ற வித்தியாசமான ஊறுகாய் தயாரிக்கும் முறையைப் பின்பற்றுகின்றன. தென்னிந்திய குடும்பங்கள் ஊறுகாய்களை அதிக அளவில் தயாரித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கின்றனர்,
ஆந்திராவில் பெரும்பாலான வீடுகளில் ஆவக்காய் ஊறுகாய் இல்லாமல் எந்த உணவும் முழுமையானதாக கருதப்படுவதில்லை. சமையலறை அலமாரிகளில் பீங்கான் ஜாடிகளில் பக்குவமாக தயாரித்து வைக்கப்படும் ஆவக்காய் ஊறுகாய் ஆண்டு முழுவதும் ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும் ஆவக்காய் ஒவ்வொரு வீட்டிலும் பிரதானமானது. பெரும்பாலும் சாதம் மற்றும் நெய்யுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. மேலும் தோசை, சப்பாத்தி, உப்புமா என பல வகை உணவுகளுடன் ஆவக்காய் அருமையாக ஜோடி சேர்ந்து அந்த உணவின் சுவையை மேலும் கூட்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆவக்காய் ஊறுகாய் சொந்த நாட்டு நினைவுகளை கொண்டு வரும். சில ஆவக்காய் பிரியர்கள் வெளி ஊருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்லும்போது கூட ஆவக்காய் ஊறுகாயை கட்டாயம் எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
ஆவக்காய் தெலுங்கு பேசும் குடும்பங்களில் தலைமுறைகளாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சமையல் பாரம்பரியமாகும்."ஆவக்காயா" என்ற தெலுங்கு சொல்லில் ‘ஆவ’ என்றால் கடுகு என்று பொருள்படும் "காயா" என்றால் காய்கறி. கடுகு தூள், சிவப்பு மிளகாய் தூள், வெந்தய விதைகள், உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் மாங்காய் துண்டங்களை கலந்து ஆவக்காய் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. சிலர் கூடுதல் சுவைக்காக பூண்டு சேர்க்கிறார்கள்.
ஊறுகாய் தயாரிக்கும் செயல்முறை என்பது கலை மற்றும் அறிவியலின் கலவையாகும். இதில் சரியான மாங்காய்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சரியான அளவு மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும். கொரியர்கள் கிம்ச்சி ஊறுகாய் தயாரிப்பதை ஒரு சடங்காக செய்வது போல ஆந்திராவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஊறுகாய் தயாரிப்பில் ஈடுபடுத்தும் ஒரு வருடாந்திர சடங்கு மற்றும் பாரம்பரியமும் கூட.
சமீபத்தில் ஆவக்காய் சாதம் சாப்பிட்ட பின் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைவதை விளக்கும் வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வைரல் ஆனது. என் அலுவலகத்தில் தெலுங்கு பேசும் தோழி லஞ்ச் பாக்ஸில் தினமும் ஆவக்காய் சாதம் கொண்டு வருவார். தினமும் ஆவக்காய் சாப்பிட்டால் உடலுக்கு கேடு வராதா எனக்கேட்டால் அவர் முகம் ஆவக்காய் ஊறுகாய்போல சிவந்து விடும். ‘என் அம்மா, அம்மம்மா மற்றும் மூதாதையர் இதை சாப்பிட்டுதானே நன்றாக நீண்ட காலங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பார் பட்டென்று.
இந்த ஊறுகாயில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மாங்காயில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதில் நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆவக்காயில் இருக்கின்றன. கணிசமான அளவு பூண்டை தவறாமல் உட்கொள்வது புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவும். வெந்தய தூள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் ஆவக்காய் ஊறுகாயை பருப்பு சாததுடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட அமிர்தமாக இருக்கும். சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.