தமிழ்நாட்டில் செய்யப்படும் பருப்பு கடையலின் சுவை சூப்பராக இருக்கும். அதேபோல ஆந்திராவில் செய்யப்படும் தக்காளி பருப்பு கடையல் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் தனித்துவமான சுவை, நறுமணம், காரம் ஆகியவை பலரையும் அதன் பக்கம் சுண்டி இழுக்கும். ஆந்திராவில் காரசாரமான உணவுகளுக்கு மத்தியில் இந்த கடையல் பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இந்தப் பதிவில் ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையலை எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
தக்காளி - 3 (பெரியது)
வெங்காயம் - 1 (பெரியது, பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் - 3-4
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை அளவு
வெந்தயப் பொடி - சிட்டிகை அளவு
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் 4-5 விசில் விட்டு வேக வைக்கவும். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
இப்போது ஊற வைத்த புளியை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். பின்னர், வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து வதக்கிய கலவையில் சேர்க்கவும்.
பின்னர், மற்றொரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளித்து, பருப்பு கலவையில் சேர்க்கவும். இப்போது கூடுதல் சுவைக்கு மிளகாய் தூள், பெருங்காயம், வெந்தயப்பொடி நன்றாக சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சூப்பரான சுவையில் தக்காளி பருப்பு கடையல் தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.