
அக்கி ரொட்டி:
செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு -ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்- அரை கப்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை-
கைப்பிடி அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- ஒன்று
சீரகம் -சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நன்றாக பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். பிறகு அதை வெளியில் எடுத்து ஒரு கடாயில் எண்ணெய் தேய்த்து நன்றாகத் தட்டவும். மெலிதாக கடாய் முழுவதும் தட்டி இடையிடையே ஓட்டை போடவும்.
அதை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிட்டு நன்றாக வாசனை வரும்பொழுது எடுத்துவிட வேண்டியது தான் . அடுத்த ரொட்டியை அந்த கடாயில் தட்டும் பொழுது சூடாக இருக்கும். ஆதலால் கடாயை நன்றாக தண்ணீரில் நனைத்து விட்டு எண்ணெய் தேய்த்து மாவைத் தட்டி எடுக்கவும்.
குருமா காரச் சட்னியுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும். ஒருவருக்கு ஒரு அக்கி ரொட்டி சாப்பிட்டால் போதும் என்று இருக்கும்.
புளி வடை:
செய்யத் தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி- ஒரு கப்
துவரம் பருப்பு -ஒரு கப்
புளி- சிறிதளவு
சிவப்பு மிளகாய்- ஐந்து
சீரகம் -ஒரு டீஸ்பூன்
தனியா ,கறிவேப்பிலை பொடியாக அரிந்தது- கைப்பிடி அளவு
வெங்காயம்- பொடியாக அரிந்தது கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை;
அரிசி, பருப்பை, வர மிளகாய், புளி உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம். கருவேப்பிலை, தனியா, சீரகம் சேர்த்து வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். வித்தியாசமான ருசியில் மிகவும் அசத்தலாக இருக்கும் இந்த புளி வடை.