

கிராமத்து சுவையில் பாரம்பரிய காரக்குழம்பு ரெசிபி
தேவையான பொருட்கள்:
பிடி கருணைக்கிழங்கு -200 கிராம்
நல்லெண்ணெய் -2½ டேபிள் ஸ்பூன்
உரித்த பூண்டுப் பற்கள் -15
பெரிய வெங்காயம் -1
தக்காளி -2
திக்கான புளிக் கரைசல் -⅓ கப்
உப்பு -தேவையான அளவு
ஃபிரஷ் கறிவேப்பிலை -ஒரு இணுக்கு
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
தனியா தூள் -3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1
மண் சட்டியில் மணக்கும் காரக்குழம்பு ரெசிபி செய்முறை
வெங்காயம் மற்றும் தக்காளிகளை பொடிசா நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்த கிழங்குகள் ஆறியவுடன் தோலை உரித்துவிட்டு, வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற, அடிகனத்த மண் சட்டியில் நறுக்கிய கிழங்குகளைப் போடவும். அதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்க்கவும். பின் புளிக் கரைசலை ஊற்றி, ஒரு தட்டையான கரண்டியால் அனைத்தையும் கலந்து விடவும். பிறகு அதில் 1⅓ டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு மேலாக நல்லெண்ணெய் ஊற்றி, சட்டியை அடுப்பில் ஏற்றி குழம்பை கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து, ஸ்பைசஸ்களின் பச்சை வாசனை நீங்கிய பின் அடுப்பை சிறு தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும். எண்ணெய் மிதந்து, குழம்பு கெட்டிப் பதம் வரும்போது, கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கம கம பிடி கருணை காரக்குழம்பு தயார். சூடான சாதத்தில் ஊற்றிப் பிசைந்து, முட்டைக்கோஸ் கூட்டு சேர்த்து சாப்பிட தேவாமிர்த ருசிதான்!
பிடி கருணைக்கிழங்கு தோல் துவையல் ரெசிபி
தேவையான பொருட்கள்:
வேக வைத்த பிடி கருணைக் கிழங்கிலிருந்து உரித்த தோல் -1 கைப்பிடி
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன்
தேங்காய் துருவியது -1 டீஸ்பூன்
புளி -ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
சிவப்பு மிளகாய் வற்றல் -1 அல்லது 1½
கடுகு -½ டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 இணுக்கு
பொடிசா நறுக்கிய இஞ்சி துண்டுகள் -1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கருணைக் கிழங்கு தோலைப் போட்டு ஈரப் பசை இல்லாமல் வறுத்தெடுத்து ஒரு தட்டில் வைக்கவும். கடாயில் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி ஆகியவற்றை தனித் தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் வறுத்த பொருட்களுடன் உப்பு, தேங்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்துப் போட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் தாளிப்புக் கரண்டியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு. கறிவேப்பிலை சேர்த்து அவை வெடித்ததும் துவையலில் சேர்த்துக் கலக்கவும். சுவை மிக்க இந்த துவையலை தயிர் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட வைத்துக் கொள்ளலாம்.
இந்த பாரம்பரிய சமையல் முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், ஹோட்டல் சுவையை மிஞ்சும் வகையிலான மதிய உணவை உங்கள் குடும்பத்தினருக்கு வழங்கி அசத்த முடியும். காரசாரமான குழம்பும், ஆரோக்கியம் நிறைந்த துவையலும் உங்கள் டைனிங் டேபிளை ஒரு தென்னிந்திய விருந்தாக மாற்றி, அனைவரையும் தட்டுகளை வழித்துச் சாப்பிட வைக்கும் திருப்தியை உங்களுக்குத் தரும்.