மோடி கொடுத்த ஒரே ஒரு கிஃப்ட்... உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த 'தேகுவா' பலகாரம்! 

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பரிசால் உலக அளவில் ட்ரெண்டாகி வரும் பீகாரின் பாரம்பரிய தேகுவா இனிப்பு உருவான வரலாறு மற்றும் அதன் அசத்தலான செய்முறை இதோ!
thekua recipe தேகுவா இனிப்பு
thekua recipe தேகுவா இனிப்பு
Updated on

சமீபத்தில் 5 நாள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஸ்லோவாக்கியா நாட்டின் நாடாளுமன்றத் தலைவருக்கு ஒரு சிறப்பான இந்தியப் பண்டத்தைப் பரிசளித்திருந்தார். அதுதான் தற்போது இணையம் முழுவதும் ஹாட் டாபிக்காக மாறி வரும் தேகுவா இனிப்பு

பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்களுக்குத் தங்க முலாம் பூசிய பொருட்களோ அல்லது விலை உயர்ந்த கலைப்பொருட்களோ தான் பரிசளிக்கப்படும். ஆனால், முற்றிலும் மண்ணின் மணம் மாறாத ஒரு எளிய கிராமத்துப் பலகாரத்தைப் பிரதமர் மோடி பெருமையோடு உலக அரங்கில் பரிசளித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வரலாறு! 

இந்தியாவின் பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகத் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு 'தேகுவா' (Thekua). சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'சத் பூஜை' திருவிழாவின் போது இது மிக முக்கிய புனிதப் பிரசாதமாகப் படைக்கப்பட்டு வருகிறது. 'தோக்னா' என்ற வார்த்தையிலிருந்து உருவான இதன் பெயருக்கு "அழுத்துவது" என்று பொருள். 

மாவை மர அச்சுகளில் வைத்து கைகளால் அழுத்தி, படத்தில் உள்ளவாறு நேர்த்தியான இலை மற்றும் மலர் வடிவங்களை உருவாக்குவதால் இப்பெயர் பெற்றது. கோதுமை மாவு, வெல்லம் மற்றும் நெய் சேர்த்துச் செய்யப்படும் இந்த சத்தான இனிப்பு, நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் தனித்துவமான தன்மை கொண்டதால், பழங்காலத்தில் இருந்தே மக்கள் நீண்ட தூரப் பயணங்களின் போது இதனை முதன்மை சிற்றுண்டியாக எடுத்துச் சென்றனர். 

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 2 கப்

  • பொடித்த வெல்லம் - 3/4 கப்

  • தண்ணீர் - 1/2 கப்

  • சுத்தமான நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • சோம்பு - 1.5 டீஸ்பூன்

  • துருவிய காய்ந்த தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

  • சமையல் எண்ணெய் அல்லது நெய் - பொரித்து எடுக்கத் தேவையான அளவு

செய்முறை! 

முதலில் அரை கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி, கைகளால் மாவை நன்றாகத் தேய்த்துப் பிசைய வேண்டும். 

thekua recipe தேகுவா இனிப்பு
thekua recipe தேகுவா இனிப்பு
இதையும் படியுங்கள்:
காதுகளையும் சற்று கவனியுங்கள்! மனக்காது என்று எதுவும் இல்லை...
thekua recipe தேகுவா இனிப்பு

மாவை ஒரு பிடி பிடித்தால் கொழுக்கட்டை போலப் பிடிக்க வர வேண்டும்; உதிர்த்தால் உதிர வேண்டும். இதுதான் மொறுமொறுப்பிற்கான ரகசியம். இதனுடன் சோம்பு, கொப்பரைத் தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து, நாம் காய்ச்சி வைத்துள்ள வெல்லத் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிச் சப்பாத்தி மாவை விட மிகவும் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த தேகுவா இனிப்பு மாவில் லேசான விரிசல்கள் இருப்பது அசல் பக்குவத்தின் அடையாளமாகும்.

பிசைந்த மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளை எடுத்து, கைகளால் தட்டையாகவோ அல்லது நீள்வட்டமாகவோ தட்டிக் கொள்ளுங்கள். பீகாரில் இதற்கென மரத்தாலான அச்சு இருக்கும். அது இல்லையெனில், ஒரு டூத்பிக் அல்லது போர்க் ஸ்பூனின் பின்புறத்தை வைத்து மாவின் மேல் இலை போன்ற டிசைன்களை அழுத்தமாகப் பதித்துக் கொள்ளலாம். 

இப்போது கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான சூடானதும், தட்டி வைத்துள்ள துண்டுகளைப் போட்டு, அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்து இரண்டு பக்கமும் நல்ல பொன்னிறமாகப் பொறுமையாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பெண்களே சற்று கவனியுங்கள்! இந்த 5 விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம்!
thekua recipe தேகுவா இனிப்பு

பொரித்து எடுத்தவுடன் இவை சற்று மென்மையாக இருக்கும், ஆனால் முழுமையாக ஆறிய பிறகு கடைகளில் விற்கும் குக்கீஸை விட அட்டகாசமான மொறுமொறுப்பிற்கு வந்துவிடும். செயற்கையான ரசாயனங்கள் கலந்த பிஸ்கட்டுகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, நம் நாட்டின் பாரம்பரியமான இந்த தேகுவா இனிப்பு செய்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிரதமர் மோடி மூலமாக இன்று உலக அரங்கில் ஜொலிக்கும் இந்த எளிய கிராமத்துப் பலகாரத்தை, இந்த வார இறுதியில் உங்கள் வீட்டு கிச்சனிலும் மணக்கச் செய்து சுவைத்து மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com