

அவரைக்காய் புளிக்குழம்பு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.அவரை காய் 250 கிராம்
2.தோல் நீக்கிய சாம்பார் வெங்காயம் 200 கிராம்
3.நறுக்கிய தக்காளி 2
4.சீரகம் 1 டீஸ்பூன்
5.மிளகு ½ டீஸ்பூன்
6.தேங்காய் துருவல் ¼ கப்
7.தனியா பவுடர் 2 டீஸ்பூன்
8.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
9.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
10.கறிவேப்பிலை 2 இணுக்கு
11.புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு
12.உப்பு தேவையான அளவு
13.நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
14.வெந்தயம் 1 டீஸ்பூன்
15.சிவப்பு மிளகாய் 2
16.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்
செய்முறை:
புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அவரைக்காயை நார் உரித்து இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை இரண்டிரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பாதி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகு, சீரகம், ஒரு இணுக்கு கறிவேப்பிலை ஆகியவற்றையும் அதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, தீயை மிதமாக எரியவிட்டு, அதனுடன் மிளகாய் தூள், தனியா பவுடர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக அரை நிமிடம் கிளறிவிட்டு கடாயை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
பின் அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கலக்கவும். கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசாலாவை மசிய அரைத்தெடுக்கவும்.
பின் மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்க்கவும். அவை வெடித்ததும், கறிவேப்பிலை, ரெண்டு சிவப்பு மிளகாய் கிள்ளிப்போட்டு, பின் மீதி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன் பின் அவரைக்காயை சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின் புளித்தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய் வேகும் வரை
குழம்பை கொதிக்கவிடவும். பின் கால் டீஸ்பூன் பெருங்காய தூள் சேர்த்து இறக்கிவிடவும். குழம்பு ரொம்ப கெட்டியாகிவிடாமல், சாதத்தில் பிசைந்து சாப்பிடும் அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். மணமும் சுவையும் நிறைந்த அவரைக்காய் புளிக்குழம்பு சூடான சாதத்தில் பிசைந்து உண்ண ரெடி!
சுவை மிகுந்த நெல்லிக்காய் தொக்கு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.நெல்லிக்காய் (Amla) 250 கிராம்
2.சிவப்பு மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
3.உப்பு 1 டேபிள் ஸ்பூன்
4.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
5.வறுத்து அரைத்த வெந்தய தூள் ¼ டீஸ்பூன்
6.நல்லெண்ணெய் 6 டேபிள் ஸ்பூன்
7.கடுகு 1 டீஸ்பூன்
8.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காய்களை நன்கு கழுவி, ஈரமில்லாமல் துடைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும்,
நெல்லிக்காய்களை போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், தட்டில் எடுத்து வைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு, சதைப் பகுதியை சேகரிக்கவும். பின் அதை மிக்ஸியில் போட்டு சிறிது கொற கொறப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும். பின் மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து அரைதெடுத்த நெல்லிக்காய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி 5 நிமிடம் வேகவிடவும். பிறகு மிளகாய் தூள் பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது, கடாயை இறக்கி வைக்கவும். நன்கு ஆறியதும் காற்றுப் புகாத கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைத்துப் பயன்படுத்தவும்.