மழை வரும்போது ஏதேனும் நாவிற்கு ருசியாக செய்து தரச்சொல்லி சொல்வார்கள். இதோ அதற்கென்று இரண்டு சத்துள்ள சூப்பர் டிஷ் இங்கே…
மீல் மேக்கர் மிளகு கூட்டு
தேவை;
மீல்மேக்கர் - 1 பாக்கெட்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி 3
சீரகம் - அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
காய்ந்த வரமிளகாய் - 2
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வேக வைத்த துவரம் பருப்பு - கால் கப் மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
சோம்பு -ஒரு டீஸ்பூன்
தேங்காய் விழுது- 4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை;
மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு அலசி பிழிந்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்து மசிக்கவும். மிளகு சோம்பு இவற்றை சூடான தாளிப்புக் கரண்டியில் வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் தேவையான எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளித்து அதனுடன் இரண்டாக வெட்டிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் இதில் மீல் மேக்கரை போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட்டு வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கிளறி 2 நிமிடம் கழித்து நைசாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். இறக்கும்போது வறுத்து பொடித்த சோம்பு, மிளகுத் தூள் சேர்த்து மூடி வைக்கவும். இதில் துவரம் பருப்புக்கு பதில் பாசிப்பருப்பும் சேர்க்கலாம். சாதம் சப்பாத்திக்கு ஏற்றது. மிளகு சேர்ப்பதால் மழைக்கு இதமாகும்.
பேபி ஆலு வெஜிடபிள் பிரியாணி
தேவையானவை;
பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ
நறுக்கிய கேரட் முட்டைக்கோஸ் , பீன்ஸ்- 1 கப்
பிரியாணி அரிசி - ஒரு கப்
தக்காளி வெங்காயம்- தலா ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
புதினா - சிறிது
கொத்தமல்லி தலை - சிறிதளவு எலுமிச்சை சாறு -அரை மூடி
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
,உப்பு - தேவையான அளவு
நெய்- மூன்று ஸ்பூன்
சோம்பு - சிறிது
பச்சை மிளகாய் - இரண்டு
பட்டை - சிறு துண்டு
லவங்கம் , ஏலக்காய் - தலா 3
மராட்டிமொக்கு, அன்னாசிப்பூ , பிரிஞ்சி இலை, கல்பாசி சேர்ந்த பிரியாணி சாமான்கள் - தேவைக்கு
செய்முறை;
பிரியாணி அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து ஒரு அகலப் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய் சேர்த்து ஆறு வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி சாமான்களை பொரித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி, கேரட் வெஜிடபிள் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் புதினா ,பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக கிளறவும். இதில் உப்பு, மஞ்சள் தூள் தேவையான மிளகாய்தூள் சேர்த்து கிளறி ஏற்கனவே வெந்து தோல் உரித்து வைத்த பேபி உருளைக்கிழங்குகளை போட்டு நன்கு வதக்கவும். இறக்கும் போது எலுமிச்சைசாறு சேர்த்துக்கிளறி ஐந்து நிமிடம் கழித்து மிதமான தீயில் வைத்து வடித்த சாதத்தை சேர்த்து மேலே லேசாக நெய் விட்டு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த பிரியாணி குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான பிரியாணி.