
சில நேரங்களில் வீட்டில் அதிகமாக வாங்கி வரும் பீட்ரூட் கேரட் அப்படியே இருக்கும். அதில் அல்வா, பாயசம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி வித்தியாசமான சுவையாக இருக்கிறது என்று கூறி சாப்பிட்டு விடுவார்கள். நாமும் புதிதாக முயற்சி செய்து ஒரு ஸ்வீட்டை செய்த திருப்தி அடையலாம். அப்படி செய்வதில் பீட்ரூட் அல்வா செய்முறையைப் பார்ப்போம்.
பீட்ரூட் அல்வா
செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய பீட்ரூட் -ஒரு கப்
காய்ச்சி ஆறிய பால்- இரண்டு கப்
வெல்லத் துருவல் -அரை கப்
முந்திரி, பாதாம் ப்ளேக்ஸ் -இரண்டு டேபிள் ஸ்பூன்
நெய் -3 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
செய்முறை:
குக்கரில் துருவிய பீட்ரூட் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பின்னர் இவற்றை நன்றாக ஆறவிட்டு அதனுடன் வெல்லத் துருவல் மற்றும் ஏலத்தூள், ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து கலவையில் நன்கு நீர் வற்றி கெட்டியாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சூடாகவும் பரிமாறலாம். குளிர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டாலும் நல்லது. ரத்த விருத்தியை உண்டு பண்ணும். ஹீமோகுளோபினை கூட்டும்.
முகம் வெளிறி ரத்த சோகையாக இருப்பவர்களுக்கு இதுபோல் செய்து கொடுக்கலாம். வெல்லம் மற்றும் முந்திரி பாதாம் அனைத்தும் சேர்வதால் ருசித்து சாப்பிடுவர். மேலும் ரத்த சோகை, குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் இனிப்பாக சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதுவும் நிறைவேறும். உணவே மருந்தாவது இப்படித்தான்.
கேரட், ரவா பாயசம்
செய்யத் தேவையான பொருட்கள்:
கேரட் -ஒன்று பொடியாக அரிந்தது
வறுத்த ரவை- ஒரு கப்
வெல்லத் துருவல் -கால் கப்
நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
வறுத்த முந்திரி ,திராட்சை தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
தேவையான அளவு தண்ணீரில் ரவையுடன் கேரட்டை சேர்த்து வேகவைத்து மசித்து, வெல்லத் துருவல், நெய் சேர்த்து பதமாக வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி திராட்சை தூவி பரிமாறவும். மிதமான சுவையில் எளிமையாக செய்யக்கூடிய பாயசம் இது.