
முருங்கைக் கீரையும், கேரட்டும் விட்டமின் சத்து நிறைந்தவைகள். இவைகளை உபயோகித்து சாம்பார், கூட்டு, பொரியல் மற்றும் அடை மாவில் கலந்து அடை போன்றவைகளைச் சாப்பிடுவது வழக்கம்.
ஆனால், முருங்கைக்கீரை-கேரட்டை வைத்து தயார் செய்யும் பிடி கொழுக்கட்டை சத்து நிரம்பியது. வயிற்றிற்கும் கேடு விளைவிக்காதது.
தேவை:
நல்ல சுத்தமான கைக்குத்தல் அரிசி 2 கிண்ணம்
கேரட் 2
தேங்காய் (பெரியது) 1
முருங்கைக்கீரை (ஆய்ந்தது) 2 கப்
இஞ்சி பச்சை மிளகாய் விழுது 1 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை 1 கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீ .ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணை 3 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் கைக்குத்தல் அரிசியை, உப்புமா ரவை போல மெல்லிசாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய தேங்காயை உடைத்து, துருவி தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும்.
முருங்கைக் கீரையை, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். கேரட்டைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
அடிகனமான கடாய் ஒன்றில் தேங்காய் எண்ணெயை விட்டு அடுப்பின் மீது வைத்து காயவிடவும். காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை வேர்க்கடலை போட்டு தாளிக்கவும். இத்துடன், இஞ்சி- பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்து கிளறி, பின் வடித்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையைப் போட்டு வதக்கவும். துருவிய கேரட்டையும் இதில் போட்டு வதங்கிய பிறகு, ஒரு கப் தண்ணீர் மற்றும் தேங்காய்ப் பால் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
கலவை கொதிக்கையில், உடைத்து வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி ரவையைக் கொஞ்சம், கொஞ்சமாக போட்டு கிண்டுகையில், தேவையான உப்பு சேர்க்கவும். அடுப்பிலிருந்து கீழே இறக்கி சற்றே ஆறவிடவும்.
லேசான சூட்டில் மாவு இருக்கையில், சிறு உருண்டைகளாக எடுத்து, பிடி கொழுக்கட்டைகளாக செய்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
முருங்கைக்கீரை மணம் வீசும் சத்தான பிடி கொழுக்கட்டையை தேங்காய் அல்லது தக்காளிச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட, மிகவும் ருசியாக இருக்கும்.