
தினமும் நாம் சாப்பிடும்போது கடைசியாக, "ஒரு வாய் தயிர் சாதம் சாப்பிடு" ன்னு பெரியவர்கள் வற்புறுத்துவதுண்டு. காரணம், தயிர் ஜீரணத்துக்கு உதவும் என்பார்கள். தற்போது தயிரிலுள்ள புரோபயோட்டிக்குகள் என்னும் நல்ல பாக்ட்டீரியாக்கள் குடலிலுள்ள நல்ல பாக்ட்டீரியாக்களுடன் இணைந்து ஜீரணம் மேலும் சிறப்பாக நடைபெற உதவுமென்பதை அறிந்துள்ளோம். இந்த தயிரை பயன்படுத்தி எத்தனை வகை உணவுகள் தயாரிக்கலாம் என்பது நம்மை ஆச்சரியப்பட செய்கிறது. அவை என்னென்ன என்பதை இப்பதில் பார்க்கலாம்.
ஸ்ரீகண்ட் (Shrikhand): ஸ்ரீகண்ட், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் பிரசித்தி பெற்றதொரு டெஸ்ஸர்ட். கெட்டித் தயிரில், சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் பவுடர் போன்ற சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படுவது.
தயிர் வடை (Dahi Vada): உளுத்தம் பருப்பில் செய்த வடைகளை சுடுநீரில் முக்கிப்பிழிந்தெடுத்து பௌலில் வைத்து அதன் மீது தாராளமாக தயிர் ஊற்றவேண்டும். பின் அதன் மேற்பரப்பில் இனிப்பு புளிப்பு சட்னி, ஸ்பைசஸ், காரா பூந்தி, மல்லி இலைகள் தூவி உண்கையில் அதன் சுவைக்கு ஈடு இணை கிடையாது.
கதி (Kadhi): குஜராத் மாநிலத்தில் பிரபலமான உணவு. தயிரில் கடலை மாவு, உப்பு மஞ்சள் தூள், பான்ச் போறன் (Panch Phoran), ஆம்சூர் பவுடர், சேர்த்து கரைத்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி தயார் செய்யப்படும் உணவு. சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது.
தயிர் பூரி (Dahi Poori): கிரிஸ்பியான சிறிய வடிவ பூரியின் உள்ளே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, முளைகட்டிய பாசிபயிறு, கெட்டித்தயிர் ஆகியவற்றை வைத்து, மேலே இனிப்பு புளிப்பு சட்னி, கார சட்னி ஊற்றி, சேவ் மற்றும் மல்லி இலைகள் தூவி பரிமாறப்படும் சுவையான தெருக்கடை உணவு இது.
தயிர் கத்திரிக்காய் (Dahi Baingan): கத்திரிக்காய்களை எண்ணெயில் வதக்கி, கடலை மாவுடன் உப்பு, ஸ்பைஸஸ் சேர்த்துக் கரைத்து காயில் ஊற்றி, பின் கடைந்த தயிரை சேர்த்து மீடியம் தீயில் தயாரிக்கப்படுவது. சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து உண்ண தகுந்தது.
பச்சடி (Pachadi): வெள்ளரிக்காய், துருவிய கேரட், வெங்காயம் போன்ற காய்களுடன், தயிர், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு. சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக பயன்படும்.
லஸ்ஸி (Lassi): பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்தமானது. தயிரில் சர்க்கரை, மலாய், ரோஸ் சிரப் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான பானம்.
தயிர் சாதம் (Curd Rice): குழைய வேகவைத்த சாதத்தில் அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து தளர கலந்து, அதில் உப்பு, முந்திரி, மாதுளை பழ முத்துக்கள், திராட்சை பழங்கள் சேர்த்து கவர்ச்சிகரமாக கலந்து, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்துக்கொட்டி பரிமாறப்படும் சுவையான உணவு.
மோர் (Butter milk): தயிரில் தண்ணீர் கலந்து கடைந்து, அதில் பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து, கடுகு தாளித்துக்கொட்டி அருந்தப்படும் பானம். உடலுக்கு குளிர்ச்சியும் நீரேற்றமும் தரும்.
தயிர் சேர்த்து தயாரிக்க இன்னும் எத்தனையோ வகை உணவுகள் உள்ளன. நீங்களும் செய்து உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவீர்!