
நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மற்றும் உண்ணும் முறைக்கும், நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்கள் உணவியல் முறையில் மாற்றங்கள் செய்தாலே 13 ஆண்டுகள் அதிகம் வாழலாம் என்கிறார்கள் நார்வேயின் பெர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு முறையும் பசி ஏற்பட்ட பின்னர், பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். அப்போது நாம் உண்ணும் உணவு நல்ல செரிமானமாகும். இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடலில் கழிவுகள் நச்சுப்பொருட்களாக உடலில் தங்கி நோய்களுக்கு வழி வகுக்கும்.
உண்ணும் உணவை நிம்மதியாக சாப்பிடுங்கள். மனக்கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளோடு சாப்பிடாதீர்கள் உணவை உண்ணும் போது, உங்கள் முழு கவனமும் சாப்பாடு மீது இருக்க வேண்டும். டி.வி மற்றும் செல் பார்ப்பதை தவிருங்கள். எந்தவிதமான கவனச்சிதறல்கள் இல்லாமல், உணவு சாப்பிட 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உண்ணும் உணவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது பசி, எரிச்சல், சோம்பல், தலைவலியை உணர்வீர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களை ஆரோக்கிய பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுகிறது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்டு முடித்து 30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது உணவு சரியாக ஜீரணமாவதற்கு உதவுகிறது. சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றில் இருந்து குடலுக்கு தள்ளப்பட்டுவிடும்..
சாப்பிட்டு பின்னர் 20 நிமிடங்கள் கழித்து சிறு நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். நல்ல ஜீரணமாகும்.
சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வது, குளிப்பது மற்றும் தூங்கச் செல்வதற்கு போகக் கூடாது. இதனால் ஜீரண மண்டல பணிகள் பாதிக்கும். சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது தவறு. இதனால் வயிற்றில் உப்புசம் ஏற்படும். பழங்களை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பழங்களை சாப்பிட வேண்டும். அதேபோல் காபி மற்றும் தேநீர் போன்றவைகளையும் சாப்பிட்ட உடனே சாப்பிட வேண்டாம். காரணம் அவற்றில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ணும் உணவில் உள்ள புரதப் பொருட்களை கடினப் பொருட்களாக மாற்றிவிடும்..
உங்கள் பெரிய உணவுக்கு இடையே ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது அளவாக ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும். நமது உணவு காலை நேரத்தில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.
நமது சாப்பாட்டில் எதை நீக்கலாம் என்பதைவிட,எதை சேர்க்கலாம் என யோசியுங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பருப்பு, முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த உணவாக இருந்தாலும் சரி, நீங்கள் எது சமைத்தாலும் சரி அவற்றை பிரஷ்ஷாக வாங்கி வந்து சமையுங்கள். தானியங்களை மாவாக்கி சாப்பிடும்போது அதனை சலிக்காமல் அப்படியே பயன்படுத்த வேண்டும். இதனால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்தும் வீணாகாது.
வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சத்துக்களுக்கு எதிரானவை. எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கிய உடனே சமைத்து சாப்பிட வேண்டும். அவற்றை நீண்ட நேரம் திறந்து வைப்பதால் அது அதன் வீரியத்தை குறைத்துவிடும்.
முடிந்தளவுக்கு உங்கள் வீட்டில் சமைத்த உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெளியே சாப்பிடும் உணவுகளால்தான் ஆரோக்கிய குறைபாடு வருகிறது. உணவின் சுவைக்கு உப்பு, காரம், எண்ணெய் அவசியம்தான். ஆனால், அவை வரம்பிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தாகம் தணிக்க தண்ணீரையே பயன்படுத்துங்கள். குளிர் பானங்கள், காபி, டீ அளவோடு இருக்க வேண்டும். எந்த பானமாக இருந்தாலும், அது பாலாக இருந்தாலும் அதற்கும் கலோரி உண்டு என நினைவில் கொள்ளவேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்களோடு மொத்தமாக அமர்ந்து சாப்பிடுங்கள், ஆரோக்கியமான உணவை சாப்பிட அது உதவும்.