பழங்களுடன் ஒரு சிட்டிகை உப்பு: சுவைக்காகவா? ஆரோக்கியத்திற்காகவா?

fruits-with-salt
fruits-with-salt
Updated on

இயற்கையாகவே இனிப்பு அல்லது புளிப்பு சுவை கொண்ட சில பழங்களுடன் ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் காரம் சேர்த்து சாப்பிடும்போது அந்த பழத்தின் சுவை பல மடங்கு கூடும். அப்படி உப்பு சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்கள் இதோ:

கொய்யாப்பழம் Guava:

கொய்யாப் பழத்தை நறுக்கி அதில் உப்பும் ,மிளகாய்த் தூளும் தூவி சாப்பிடுவது மிகவும் பிரபலம். இது பழத்தின் துவர்ப்புத் தன்மையை சமன் செய்து சுவையை அதிகரிக்கும்.

நெல்லிக்காய் Goosberry:

பெரிய நெல்லிக்காயில் உள்ள அதிகப்படியான புளிப்பு மற்றும் துவர்ப்பை சமாளிக்க உப்பு அவசியம். உப்பில் தொட்டுச் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் வாய் இனிப்பாக இருக்கும்.

மாம்பழம் மற்றும் மாங்காய் Mango:

புளிப்பு மாங்காய்க்கு உப்பும், காரமும் ஒரு சிறந்த காம்பினேஷன்.

மாம்பழம்: அதிக இனிப்புள்ள மாம்பழத்தின் மேல் லேசாக உப்பு தூவினால் அந்த இனிப்பு சுவை இன்னும் எடுப்பாகத் தெரியும்.

அன்னாசிப்பழம் Pineapple:

அன்னாசிப் பழத்தை சாப்பிடும்போது சிலருக்கு நாக்கில் ஒருவித அரிப்பு அல்லது நமநமப்பு ஏற்படும். உப்பு சேர்த்து சாப்பிடும் பொழுது அந்த அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் அதன் புளிப்பை சமன் செய்யும்.

தர்பூசணி Watermelon:

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருக்கும் .அதில் லேசாக உப்பு தூவி சாப்பிடுவது அதன் இனிப்பை அதிகப்படுத்துவதோடு கோடைக் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளை (Electrolytes) மீட்க உதவும்.

நாவல் பழம் Jamun Fruit:

நாவல் பழத்தில் உள்ள துவர்ப்புத் தன்மையைக் குறைக்க அதை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் குலுங்கிச் சாப்பிடுவது ஒரு தனிச்சுவை.

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி முதல் பஜ்ஜி வரை - உணவின் ருசியை மாற்றும் எளிய வழிமுறைகள்!
fruits-with-salt

ஏன் உப்பு சேர்க்கிறோம்?

சுவை மொட்டுக்கள்: உப்பு நமது நாவில் உள்ள சுவை மொட்டுகளைத்தூண்டி பழத்தில் உள்ள இனிப்பை இன்னும் அதிகமாக உணரச்செய்கிறது.

செரிமானம்: சில பழங்களுடன் உப்பு சேர்ப்பது செரிமானத்திற்கு உதவுவதோடு, வாய்வுத் தொல்லையை தடுக்கவும் உதவும்.

அரிப்பு தடுப்பு: அன்னாசி போன்ற பழங்களில் உள்ள நொதிகளால் ஏற்படும் நாக்கரிப்பை உப்பு கட்டுப்படுத்துகிறது.

எச்சரிக்கை:

இப்படி உப்பை சேர்த்து சாப்பிடுவது பல்வேறு நன்மைகளை தருகிறது என்றாலும், சில எச்சரிக்கை உணர்வையும் நாம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் பழங்களில் அதிக உப்பு சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. இயற்கையாகவே பழங்களில் பொட்டாசியம் இருப்பதால் கூடுதல் உப்பு சேர்ப்பது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால் இதில் கவனமாக இருப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com