சப்பாத்தி முதல் பஜ்ஜி வரை - உணவின் ருசியை மாற்றும் எளிய வழிமுறைகள்!

useful-kitchen-tips
useful-kitchen-tips
Published on

உப்புமா, வெண்பொங்கல் போன்றவை சமைத்த கொஞ்ச நேரத்திலேயே கெட்டியாகிவிடும். அரைக்கரண்டி சூடான பாலை அதில் ஊற்றிக் கிளறிவிட்டால் நன்கு இளகிவிடும். சுவையும் மாறாது.

கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது பதம் தவறி நீர்த்துவிட்டால், சிறிதளவு சோளமாவைக் கரைத்துச் சேர்க்கலாம்.

தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணையில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து தாளிக்கும் சாதத்துடன் கலந்துவிட்டால் சுவையான இஞ்சிசாதம் தயார்.

சப்பாத்திக்கு கோதுமை மாவு பிசையும்போது, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் இவற்றை விழுதாக அரைத்து, மாவோடு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.

காலையில் செய்த சாதம் மிச்சமிருக்கிறதா? சாதத்தின் அளவில் பாதியளவு உளுத்தம் பருப்பை கால்மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் அரையுங்கள். அதன் மேலேயே சாதத்தையும் உதிர்த்துப் போட்டு உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சுவை மிகுந்த போண்டா செய்யலாம்.

இட்லி, தோசை, அடைமாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்களுக்கு புளிக்காமல் இருக்கும்.

முட்டைக்கோஸின் கனமான தோலைத்தூக்கி எறியாமல் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சூப்பர் சுவையில் பஜ்ஜி தயார்.

அடைக்கு அரைக்கும்போது மிளகாய் வத்தல்போட்டு அரைத்து, பின் ஒரு பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டால் நல்ல வாசனையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுடச்சுட சாதமும், நெய் மணக்கும் பருப்பு பொடியும்! நாவூறும் ரகசிய ரெசிபி இதோ!
useful-kitchen-tips

நறுக்கிய வெங்காயத் துண்டுகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பிறகு மாவில் தோய்த்தெடுத்தால் வெங்காய பஜ்ஜி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

மிக்ஸியில் மாவு அரைக்கும்போது, மிக்ஸி சூடாகி விடாமல் இருக்க சிறிது ஐஸ் வாட்டர் கலந்து அரைத்தால் போதும்.

சாம்பார் செய்யும்போது, புளியின் அளவைக்குறைத்து, தக்காளிப்பழங்களை சேர்த்து கொதிக்கவிட்டால் சாம்பாரின் சுவையே அலாதிதான்.

கேரட்டைத் தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வையுங்கள். பிறகு எடுத்துத் துருவினால் கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com