
1. மிக்ஸியில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது அரிசி மாவையும், உளுந்து மாவையும் அரைத்துத் தனித்தனி பாத்திரத்தில் வழித்து, அரைமணி அவகாசத்துக்கு குளிர்ந்த நீரில் வைத்து, சூடு ஆறிய பின் உப்பு போட்டு, இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கலந்து வைத்தால், மறுநாள் இட்லி மல்லிகை பூ கணக்கில் சாஃப்டாக இருக்கும்.
2. இட்லி மாவு குறைவாக இருந்தால், ரவையை வறுத்துக் கலந்து சிறிது நேரம் ஊறிய பின் இட்லி செய்துபாருங்கள் சுவையாக இருக்கும்.
3. இட்லிக்கு ஊற வைக்கும் பொழுது, பச்சரிசியை சிறிது நேரம் வெறும் வாணலியில் வறுத்து, ஊற வைத்து, அரைத்து இட்லி செய்து பாருங்கள். இட்லி மிருதுவாக இருப்பதுடன் நன்கு வெண்மையாகவும் இருக்கும்.
4. காலையில் செய்த இட்லியை, மதியம் அல்லது மாலை நேரத்தில் சாப்பிடும்போது சற்றே கெட்டியானது போல் அல்லது காய்ந்தது போல் இருக்கும். இதைத் தவிர்க்க, இரண்டு மாவுக்கு அரைக் கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றி, நன்கு கலந்து இட்லித் தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இந்த இட்லி எப்போது சாப்பிட்டாலும் அப்போது செய்தது போலவே மென்மையாக இருக்கும்.
5. இட்லி மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு கடுகு தாளித்து ஊத்தப்பமாக ஊற்றி எடுக்கலாம் ருசியாக இருக்கும்.
6. இட்லிக்கு அரைக்க முழு உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, எடுத்து விட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். குறைந்த அளவு பருப்பே போதுமானது.
7. இட்லி செய்ய அரிசியை அரைக்கும் போது, சிறிது அவல் சேர்த்தால் இட்லி பூப்போல இருக்கும்.
8. இட்லி சுடும்போது மாவில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து இட்லி சுட்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் இட்லி கெடாமலும் இருக்கும்.
9. குளிர்காலத்தில் இட்லி மாவு லேசில் பொங்காது. குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கீழே இறக்கி அதில் மாவு பாத்திரத்தை வைத்து மூடவும். மறுநாளே பதமாய் பொங்கி இருக்கும்.
10. இட்லி மாவு மீந்து விட்டால், அதில் சிறிது துவரம்பருப்பு, பயத்தம் பருப்பு சேர்த்து மிளகாய் வற்றலுடன் ஊற வைத்து, கரகரப்பாக அரைத்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கிப் போட்டு சுவையான அடையாக செய்து விடலாம்.
11. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி அதில் ரவையைக் கிளறி இறக்கவும். புளித்த தயிரில் உப்பு, ரவை கலவை சேர்த்து உடனே இட்லித்தட்டில் ஊற்றவும். ரவா இட்லி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
12. இட்லிக்கு உளுத்தம் பருப்பை அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் இட்லி கமகமவென்று மணமாக இருக்கும்.
13. இட்லி கெட்டியாக இருக்கிறதா? நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு, ஒரு நிமிடம் ஓட விட்டு, மாவில் கலந்து அதற்குப்பின் வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
14. இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும்.