
விநாயக சதுர்த்தி நெருங்கி வரும் நேரம். விழா நாயகன் ஆனை முகத்தோனுக்கு விருப்பமான மோதகங்களை வித விதமான சுவையில் செய்து படைக்க வீட்டரசிகள் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம். உங்களுக்குத் தேவையான 3 வித கொழுக்கட்டை ரெசிபிகள் இங்கே...
அவல் வெஜிடபிள் கொழுக்கட்டை
ஒரு கப் மெல்லிதான (thin) அவலை சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும். ஒரு பெரிய கேரட், ஐம்பது கிராம் பீன்ஸ், இரண்டு இதழ் கோஸ், மூன்று பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம் ஆகியவற்றை மிக பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிண்டிவிட்டு, தேவையான உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து, சிறு தீயில் காய்களை இரண்டு நிமிடம் வேகவிடவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் ஊற வைத்த அவல் மற்றும் கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும். கலவை ஆறியவுடன், ஒரு கைப்பிடி ஃபிரஷ் கொத்தமல்லி இலைகளை சேர்த்துப் பிசைந்து, அதிலிருந்து கொழுக்கட்டைகளைப் பிடித்து எடுக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை ஒரு ஸ்டீமர் தட்டில் அடுக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் ஸ்டீமர் தட்டை உள்ளே வைத்து மூடி பத்து நிமிடம் கொழுக்கட்டைகளை வேகவைத்து எடுக்கவும்.
************
ஸ்பைசி கார்ன் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
1. மக்காச்சோள மாவு ½ கப்
2.பச்சரிசி மாவு ½ கப்
3.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
4.மிளகுத்தூள் ½ டீஸ்பூன்
5.உப்பு தேவையான அளவு
6.புதினா இலைகள் ¼ கப்
7.கொத்த மல்லி இலைகள் ½ கப்
8.லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
9.பச்சை மிளகாய் 2
10.தேங்காய் துருவல் ½ கப்
செய்முறை:
புதினா, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் தேவையான உப்பு மற்றும் கொத்த மல்லி இலைகளை மிக்ஸியில் போட்டு சட்னியாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் லெமன் ஜூஸையும் சேர்த்துக் கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மக்காச்சோள மாவு, பச்சரிசி மாவு, தேவையான உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து லெமன் சைஸ் உருண்டைகளாக மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து வட்ட வடிவமாக தட்டி நடுவில் ஒரு டீஸ்பூன் புதினா சட்னி வைக்கவும். மாவை மூடி, சட்னி வெளி வந்துவிடாமல் கவனமாக கொழுக்கட்டைகளை செய்து, ஸ்டீமர் தட்டில் அடுக்கி பத்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஸ்பைசி கார்ன் கொழுக்கட்டை தயார்.
************
பச்சரிசி ஸ்வீட் கொழுக்கட்டை
தேவை:
பச்சரிசி மாவு ஒரு கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
சர்க்கரை தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி மாவில் கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து லெமன் சைஸ் உருண்டைகளாக மாவை எடுத்து உள்ளங்கையில்
வைத்து வட்ட வடிவமாக தட்டி நடுவில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை வைக்கவும். அதன் மீது ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல் வைத்து மாவை கவனமாக மூடவும். இவ்விதம் எல்லா மாவையும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஸ்டீமர் தட்டில் அடுக்கி பத்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான பச்சரிசி ஸ்வீட் கொழுக்கட்டை தயார்.