
அடை தோசை என்பது தமிழ் நாட்டின் பாரம்பரிய சுவையான உணவு. அரிசி, பருப்பு, மசாலா சேர்ந்து தயாரிக்கப்படும் இந்த தோசை, சத்துமிக்கதும் நறுமணமிக்கதும் ஆகும். சுடச் சுட அடையில் கரகரப்பான விளிம்பு, நடுவில் மிருதுவான உணர்வு, பருப்பின் நறுமணத்தோடு மிளகாய், சீரகம் கலந்த சுவை. இதனாலே அடை தோசை ஒரு சாதாரண உணவாக இல்லாமல், பசியைத் தீர்க்கும் நெஞ்சை நிறைக்கும் சுவையாக மாறுகிறது.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி _200 கிராம்
பச்சரிசி _100 கிராம்
துவரம்பருப்பு _100 கிராம்
கடலைப்பருப்பு _100 கிராம்
காய்ந்த மிளகாய் _10
உளுத்தம்பருப்பு _50 கிராம்
பூண்டு _10 பற்கள்
பொட்டுக்கடலை _50 கிராம்
நல்லெண்ணெய் _200 மில்லி
வெங்காயம் _3
முருங்கை கீரை _2 கைப்பிடி
பச்சை மிளகாய் _2
கறிவேப்பிலை _1 கொத்து
சோம்பு _2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் _1/2 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
செய்முறை:
இட்லிஅரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இவற்றை ஓர் இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். காலையில் அரைப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னால் உளுத்தம் பருப்பில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைக்கவும். பின்னர் இரவில் ஊறவைத்த பொருட்களை சேர்த்து தனியாக கொர கொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். உளுந்தும், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து அரிசி கவலையோடு சேர்த்து ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும். பிறகு சோம்பு மற்றும் இடித்து வைத்த பூண்டு சேர்க்கவும். பிறகு புதிதாக பறித்து உருவி கழுவி சுத்தம் பண்ணி வைத்த முருங்கை கீரையை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பொட்டுக் கடலை, பெருங்காயத்தூள், தேவையான உப்பு, கருவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துவிடவும். ரொம்பவும் கெட்டியாக இல்லாமலும் மற்றும் தண்ணியாக இல்லாமலும் மாவை பக்குவமாக கலந்துகொள்ளவும்.
பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் நன்கு சூடாகியதும் தீயை மீடியமாக வைத்து விட்டு ஓரே தடவையில் குட்டி குட்டியாக மூன்று தோசை ஊற்றி அதன் மீது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சுற்றி ஊற்றி தோசை வெந்ததும் திருப்பிப் போட்டு அதன் மீது சுற்றி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தனி பாத்திரத்தில் அடுக்கி வைத்துவிட்டு பின்னர் பரிமாறலாம். மிகவும் சுவையான, சத்தான மொறு மொறுப்பு அடைத்தோசை தயார்.
அடை தோசைக்கு சிறப்பாக தக்காளி சட்னி செய்ய
தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 2 பல்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சில
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி அனைத்தையும் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடேற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியைச் சேர்க்கவும். சிறிது நேரம் கிளறி இறக்கினால் சுவையான தக்காளி சட்னி தயார். இது அடைதோசையின் கார சுவையைச் சமநிலைப்படுத்தி, இன்னும் ருசியாக்கும்.