

இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற குழம்பு இது. சுக்கில் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற ஆன்டாக்சினெட்ஸ் உள்ளது. விட்டமின் சி, நிறைய தாது பொருட்களும் உள்ளன. இவை நோய் தொற்று கிருமிகளை தடுத்து நோய் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தும். ஓமம் சுவாச பிரச்சனைகளுக்கு ஏற்றது. ஓமத்தை கசக்கி ஒரு துணியில் கட்டி மூக்கினால் முகர்ந்தால் மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு போன்றவை சரியாகும். வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி ஓமத்திற்கு உண்டு.
சுக்கு, ஓமம் குழம்பு:
சுக்கு ஒரு துண்டு
ஓமம் 2 ஸ்பூன்
மிளகு ஒரு ஸ்பூன்
வெந்தயம் அரை ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
மிளகாய் இரண்டு
நல்லெண்ணெய் கால் கப்
உப்பு தேவையான அளவு
வெல்லம் ஒரு துண்டு
தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை
சுக்கு, ஓமம் இரண்டும் சித்த ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மருந்து பொருட்களாகும். இதனைக் கொண்டு குழம்பு வைக்க இருமல், கபத்தை போக்கும். பசியை உண்டாக்கும் . ஆரோக்கியம் நிறைந்த குழம்பு இது. வயிற்றுக் கோளாறு, அஜீரண பிரச்சனைகளை சரி செய்யும். நெஞ்செரிச்சல், தலைவலி, கபஜூரம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
ருசியான இந்த குழம்பை செய்து சூடான சாதத்தில் பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, ஓமம், வெந்தயம், மிளகாய் ஆகியவற்றை நன்கு சூடு வர வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து விட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளி வாசனை போக கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு சிறு கட்டி வெல்லமும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். மிகவும் வாய்க்கு ருசியான குழம்பு தயார்.