

கோடைகாலம் தொடங்கிவிட்டது. எல்லோரும் வெளியில் சுற்றிதான் வீடு வந்து சேரவேண்டும். அடிக்கிற வெயிலானது உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் உறிஞ்சிவிடுகிறது. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த வெயிலில் இருந்து நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மோர், பானகம், சர்பத், மண்பானைத் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்து, கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
சுவையான மோர்!
பாலை நன்றாக காய்ச்சி உறை ஊற்றி கெட்டியான தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கடைந்து, அதில் சிறிதளவு உப்பு, சின்னவெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து மண்பானையில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதனை தினமும் பருகி வந்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
பலம் தரும் பானகம்!
நாட்டுப் புளியை எடுத்து தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, கரைத்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் நாட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி எதையாவது ஒன்றை சேர்த்து சுக்கு, ஏலக்காய், நான்கு மிளகு, சிறிதளவு எலும்பிச்சைசாறு சேர்த்து நன்றாக ஆற்றி மண்பானையில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
வெயிலில் அலைந்து வருபவர்களுக்கு இதனை கொடுத்தால் அவர்களுக்கு உடம்பில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இந்த பானகம் குடிப்பதற்கு மிகுந்த நறுமணத்துடன் இருக்கும் இதில் சேர்த்திருக்கும் சுக்கு, ஏலக்காய் ஆகியவை நல்ல பசியை தூண்டக் கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பானமாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோசம் தரும் சர்பத்!
ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனுடைய சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் நன்னாரி சர்பத் தேவையான அளவு ஊற்றி சிறிதளவு ஐஸ்கட்டியை நொறுக்கி, இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக ஆற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு தம்ளர் கொடுத்தால் சந்தோசமாக சர்பத்தை குடித்து மகிழ்வார்கள். இதில் சேர்க்கக்கூடிய நன்னாரி வேரிலிருந்து தயாரிக்கப்படும் சர்பத் கரைசல் உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மணம் தரும் மண்பானைத் தண்ணீர்!
எல்லோரும் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் தண்ணீரை ஊற்றி வைத்து அந்த குளிர்ந்த நீரை குடித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு சளி, இருமல் போன்றவை சில பேருக்கு ஏற்படும். ஆகையால் அப்படிச் செய்யாமல் கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே ஒரு மண்பானையை வீட்டில் வாங்கி வைத்து அதில் தினமும் தண்ணீரை ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
இந்த மண்பானைத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதனால் கோடை காலங்களில் நமக்கு உடல் சூடானது குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். இந்த மண்பானை தண்ணீரை குடிப்பதால் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தும் மனிதனின் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி.