
மழைக்கும் குளிருக்கும் இதமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த போண்டாவை டீ காபியுடன் சுவைக்க அருமையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
கோலி பஜே (மங்களூர் பஜ்ஜி):
கோலி பஜே உடுப்பி, மங்களூர் பகுதிகளில் பிரபலமான தேநீர் நேரத்து சிற்றுண்டியாகும்.
மைதா 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் 2
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு சிறிது
சமையல் சோடா 2 சிமிட்டு
கறிவேப்பிலை
தேங்காய் பற்கள் 2 ஸ்பூன் கொத்தமல்லி சிறிது
தயிர் 1/2 கப்
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலைை, கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை கீத்தி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் பற்கள், கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு கையால் பிசிறி கொள்ளவும். அதில் புளிப்பான தயிர் 1/2 கப் விட்டு சிறிதளவு தண்ணீரும் கலந்து போண்டா மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு ரொம்ப நீர்க்க இருந்தால் எண்ணெயை குடிக்கும். ரொம்ப கெட்டியாக இருந்தாலோ மிருதுவாக இருக்காது. கடைசியாக 2 சிமிட்டு சோடா உப்பு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து கையால் எடுத்து சின்ன சின்ன பகுதிகளாக சூடான எண்ணெயில் போடவும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். ஐந்தே நிமிடங்களில் மிகவும் ருசியான மங்களூர் கோலி பஜே தயார்.
கார மெது போண்டா:
இந்த போண்டா சாப்பிடும்போது 'கடுக் முடுக்'கென்று கடலைப்பருப்பு வாயில் அவ்வப்போது அகப்படும்போது மிகவும் ருசியாக இருக்கும்.
அரிசி 1 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
உப்பு தேவையானது
காரப்பொடி 1/2 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
அரிசி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தண்ணீரில் தனித்தனியாக ஒரு மணிநேரம் ஊறவிடவும். ஊறவைத்த அரிசி உளுந்து இரண்டையும் உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். ஊறிய கடலைப்பருப்பை தண்ணீரை வடித்து பிழிந்தெடுத்து அரைத்த மாவில் போட்டு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காரப்பொடி, கறிவேப்பிலைை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து போண்டா பதத்திற்கு ரெடி பண்ணவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தயாராக உள்ள மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும். இருபுறமும் நன்கு வெந்து மொறு மொறுப்பாக ஆனதும் எடுத்து விடவும். மேலாக மொறு மொறுவென்றும், உள்ளே மிகவும் சாஃப்ட்டாகவும் இருக்கும். இந்த போண்டா டீ, காப்பியுடன் சாப்பிட தோதாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்.
இந்த 2 வகை போண்டாக்களுக்குமே புதினா சட்னி அல்லது தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும்.