ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குருசிஃபெரஸ் குடும்பத்தை சேர்ந்த சிலுவை காய்கறிகள் என்று சொல்லக்கூடிய வகையைச் சார்ந்தது. விட்டமின் கே சி நிறைந்தது. இதன் கால்சியம் சத்து எலும்புகளுக்கு பலத்தை அளிக்கிறது. மார்பக, கர்ப்பப்பை புற்று நோய்களுக்கான செல்களை வளரவிடாமல் அழிக்கும் சக்தி கொண்டது. சருமத்திற்கும் பளபளப்பை தருகிறது. நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது என்று இவ்வளவு நன்மை தரக்கூடிய ப்ரோக்கோலியில் செய்யக்கூடிய உணவு வகைகள் இரண்டினைக் காண்போம்.
ப்ரோக்கோலி சாதம்:
செய்யத் தேவையான பொருட்கள்:
பிரக்கோலி பெரியது -ஒன்று
தேவையான அளவு- உப்பு
செய்முறை:
ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு எடுத்தால் அதன் உள்ளிருக்கும் புழு பூச்சிகள் நீங்கிவிடும்.
பிறகு அதை மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமா போட்டு ஜெர்க் விட்டு பொடித்தால் அரிசிபோல் துகள்களாக வரும்.
அவற்றை ஒரே சீராக பொடித்து குக்கரில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு ஆவி வைத்து எடுத்தால் போதும். ப்ரோக்கோலி சாதம் ரெடி. இதனுடன் சாதாரண சாதத்திற்கு சேர்த்து சாப்பிடும் காய்கறி குழம்புகளை சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். நீண்ட நேரம் பசியையும் தாங்கும்.
ப்ரக்கோலி தக்காளி சாதம்;
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி (ப்ரோக்கோலியை அரிசியாக ஆக்கியது) அரிசி -ஒரு கப்
வெங்காயம்- ஒன்று பொடியாக அரிந்தது.
தக்காளி -ஒன்று பொடியாக அரிந்தது
பூண்டு பற்கள் -நான்கு பொடிதாக அரிந்தது
எண்ணெய், உப்பு -தேவையான அளவு
மிளகாய் தூள் -ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு.
கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி- சிறிதளவு
தாளிக்க தேவையான அளவு: சோம்பு, பிரிஞ்சி இலை, கடுகு, கடலைப்பருப்பு
செய்முறை; ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சோம்பு , பிரிஞ்சி இலை தாளிக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு,தக்காளியை நன்றாக வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், , கரம் மசாலா கசூரி மேத்தியுடன் ப்ரோக்கோலி அரிசியைச் சேர்த்துக் கிளறி சிறிது நீர் தெளித்து வேகவிட்டு இறக்கவும். ப்ரோக்கோலி தக்காளி சாதம் ரெடி.
புரோக்கோலி குருமா:
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி பெரியது -ஒன்று
உருளைக்கிழங்கு வேகவைத்து துண்டங்கள் ஆக்கியது- ஒன்று
பெரிய வெங்காயம் -2 நறுக்கியது
தக்காளி- ஒன்று நறுக்கியது
பச்சை மிளகாய் -5 நறுக்கியது
பாவ் பாஜி பவுடர் -ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் 3டேபிள் ஸ்பூன், பாதாம் 3 ,முந்திரி 3, சோம்பு ஒரு டீஸ்பூன் ,கசகசா அரை டீஸ்பூன்
தாளிக்க :1 டீஸ்பூன் சோம்பு, 1மராட்டி மொக்கு
செய்முறை:
ப்ரோக்கோலியை துண்டங்களாக்கி வெந்நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பாவ்பாஜி பவுடரையும் சேர்த்து ப்ரோக்கோலி துண்டங்களை போட்டு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு சேர்த்து அரைக்க கொடுத்தவற்றை லேசாக வறுத்து ஆறவைத்து அரைத்து புரோக்கோலியுடன் சேர்த்துக் கிளறவும். ஒரு கொதிவிட்டு இறக்கவும். ப்ரோக்கோலி குருமா ரெடி. பரோட்டா, சப்பாத்தி, தோசை, இட்லி என்றும் எல்லாவிதமான கலவை சாதங்களுடனும் சேர்த்து சாப்பிட ருசியாய் இருக்கும்.