-மணிமேகலை
சமையலில் ரசம், சட்னி முதல் எந்தவொரு அசைவ உணவு தயார் செய்யும்போதும் பூண்டை சேர்த்துக்கொள்வோம். இந்த பூண்டு பல வகைகளில் நமக்கு நன்மை பயக்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இவ்வாறு உடலுக்கு நன்மை பயக்கும் பூண்டை வைத்து 5 வகையான சட்னி செய்யலாமா...?
1. கார்லிக் சட்னி:
முதலில் சட்னிக்கு தேவையான அளவு வேர்கடலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு எள் சேர்த்துக் கொள்ளலாம். பொருள்களை வறுத்தபின் அரைத்து, தாளித்து பரிமாறினால் கார்லிக் சட்னி தயார்.
2. தக்காளி கார்லிக் சட்னி:
பூண்டு மற்றும் தக்காளியை சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும். வதங்கும்போதே ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், வெந்தயம் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பின்னர் சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சுவையான தக்காளி கார்லிக் சட்னி ரெடி.
3. தேங்காய் பூண்டு சட்னி:
சட்னிக்கு தேவையான அளவு துருவிய தேங்காய், வறுத்த கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தாளிசம் சேர்த்தால் சுவையான தேங்காய் பூண்டு சட்னி தயார்.
4. கிரீன் கார்லிக் சட்னி:
பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, எலுமிச்சைசாறு, பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். கூடவே, தேவைப்பட்டால் சாட் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். அரைத்து எடுத்த விழுதை ஒரு வாணலியில் சேர்த்து தாளித்து, நன்கு வதக்கினால் சூடான கிரீன் கார்லிக் சட்னி ரெடி.
5. இஞ்சி பூண்டு சட்னி:
தேவையான அளவு சிவப்பு மிளகாய், எலுமிச்சை சாறு, சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து தாளிசம் போட்டால் சுவையான இஞ்சி பூண்டு சட்னி தயாராகிவிடும்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை அளவுக்கு மிஞ்சி எடுத்துக்கொள்வது நல்லதல்ல. பூண்டில் உடல் மற்றும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் உள்ளன. அதோடு சிலருக்கு பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, எதையும் அளவோடு சாப்பிடுவோம்.