
ஊட்டச்சத்து மிகுந்த, நல்ல திக்கான முழுதானிய பஜ்ரா சூப்பானது குளிர்காலத்திற்கு ஏற்றதொரு சிறப்பான உணவு. தமிழில் கம்பு என்று கூறப்படும் பஜ்ராவுடன் காய்கறிகளும் சேர்த்து ஓர் ஆரோக்கியமான சூப் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. கம்பு மாவு 2 டேபிள் ஸ்பூன்
2.கேரட், பீன்ஸ் + பச்சைப் பட்டாணி கலவை 1 கப்
3.நறுக்கிய இஞ்சி துண்டுகள் 1 டீஸ்பூன்
4.ஜீரகம் ½ டீஸ்பூன்
5.கருப்பு மிளகுத் தூள் ½ டீஸ்பூன்
6.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
7.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
8.தக்காளி கெச்சப் 1 டேபிள் ஸ்பூன்
9.பச்சை மிளகாய் சாஸ் 1 டீஸ்பூன்
10.வினிகர் 1 டீஸ்பூன்
11.மல்லி இலைகள் ஒரு கைப்பிடி
12. உப்பு, தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:
கேரட் பீன்ஸை சிறு துண்டுகளாக நறுக்கவும். கம்பு மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், ஜீரகம் சேர்க்கவும். சிவந்ததும், காய்கறி, பட்டாணி, இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
தேவையான தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேகவிடவும். வெந்ததும் கம்பு மாவு பேஸ்ட் சேர்த்து கிளறவும். அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் மிதமான தீயில் வைத்து, தக்காளி கெச்சப், பச்சை மிளகாய் சாஸ், வினிகர் சேர்த்து பத்து நிமிடம் மாவை வேக விடவும். பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்க்கவும்.
பிறகு கீழே இறக்கி வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். கம்பு காய்கறி சூப் தயார்.
கம்பு மாவில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட்கள் நிறைந்துள்ளன. இவை உடல் எடை குறையவும், செரிமானம் சிறப்பாக நடைபெறவும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவும். இந்த சூப்பை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கூடும்.