
வீட்டிலேயே கேக் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா? கேக் செய்யும்போது பலருக்கும் பல சந்தேகங்கள் வருவது வழக்கம். ஆனாலும் கடைகளில் வாங்கினால் குறைவாகவே வாங்க முடியும். வீட்டிலேயே செய்தால் நன்றாக இருக்கும், நிறைய வரும் என்று நினைப்பவர்கள் சில விதிகளை கடைப்பிடித்து தாராளமாக வீட்டில் செய்யலாம்.
இதோ கேக் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில விதிகள் இங்கு.
முட்டை வெண்ணைய் முதலியவை அறையின் வெப்ப நிலையில் இருப்பது மிக அவசியம். குளிர்சாதன பெட்டியில் இருந்து கேக் செய்ய துவங்கவும் 2 மணி நேரத்துக்கு முன்பே வெளியில் எடுத்து வைத்துவிட வேண்டும்.
முட்டையை அதற்கென இருக்கும் அடிப்பான் உதவியால் எவ்வளவு நுரை பொங்க அடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் கேக் மிருதுவாக இருக்கும்.
சர்க்கரையை பொடி செய்து உபயோகிப்பது நல்லது. மிக்ஸியில் மிக நைசாக பொடியாக்க வேண்டும். அப்போதுதான் அது கலவையில் சீக்கிரம் கரைவதால் கலவையில் உள்ள காற்றுக் குமிழிகள் அதிலேயே தங்கி இருக்கும். காற்றுக்குமிழிகள் அதிகம் இருந்தால்தான் கேக் மிருதுவாகும்.
கேக் வேகவைக்கும் பாத்திரத்தின் அடிபாகத்தில் நன்றாக வெண்ணெய் தடவி கலவையை அதில் ஊற்றவும். அடிபாகத்தில் அதே வடிவத்தில் வெட்டப்பட்ட பட்டர் பேப்பரை போட்டு அதில் வெண்ணெய் தடவி அதன்பின் மாவு கலவை ஊற்றுவது மிகவும் நல்லது.
பட்டர் பேப்பர் போட்டால் ஓரங்கள் கருகாமல் இருப்பதுடன் பேக் பண்ணியபின் கேக் கொஞ்சம் கூட தீய்ந்துவிடாமல் வெளியே எடுக்க எளிதாக வரும்.
மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் உப்பு போன்ற பொருட்களை சேர்க்கும்போது மாவில் பவுடரை கலந்து இரண்டு மூன்று முறை சலிக்க வேண்டும். அப்போதுதான் சமமாக கலக்கும்.
பேக்கிங் பவுடர் அதிகம் சேர்த்தால் கேக் வறட்சியாக ஆகி நடுவில் எழும்பி கீறிவிடும். ஆகவே அளவில் கவனமாக இருக்க வேண்டும்.
கேக் மொறுமொறுப்பாக இருந்தால் அதிக வெப்பத்தில் கேக் செய்து இருக்கிறீர்கள் என்ற பொருள். அல்லது தேவைக்கு அதிகமான சர்க்கரை இருந்தாலும் கேக் இறுகிவிடும். கவனம் தேவை.
தேவையான அளவுக்கு வெப்பம் இல்லையெனில் கேக் எண்ணெயில் ஊறி வெந்த பலகாரம் போன்று ஆகிவிடும்.
கேக் உள்ள அடுப்பை அடிக்கடி திறந்து மூடினால் எழும்பி வராது. கேக் மாவு நெகழ்ச்சியாக இருந்தால் கேக் அமுங்கி பள்ளம் விழுந்ததுபோல் இருக்கும்.
உலர்ந்த பழ வகைகளை ஈரப்பசையுடன் கேக் மாவில் சேர்க்கக் கூடாது. உலர்ந்த பழவகைகளை கேக்கில் உபயோகிக்கும்போது முதலில் சிறிது மாவில் பழ வகைகளை புரட்டிக்கொண்டால் பழவகைகளை கலவையில் பரவலாக பரவி நிற்கும். இல்லையெனில் கலக்கும்போது அவை கீழே அடியில் தங்கிவிடும்.
சரியான அளவுகள் மற்றும் சமைக்கும் நேரத்துடன் இது போன்ற சின்ன சின்ன விதிகளை கடைப்பிடித்து கேக் செய்யும்போது நிச்சயம் கேக் செய்ய எளிதாகும். அனைவரும் பாராட்டுவதோடு உங்களுக்கும் வீட்டிலேயே கேக் செய்த திருப்தி கிடைக்கும்.