
கொஜ்ஜு அவலக்கி எனவும் கூறப்படும் இந்த உணவானது இனிப்பு, புளிப்பு மற்றும் ஸ்பைசி சுவையுடன் அவல் சேர்த்து தயாரிக்கப்படுவது. ஏறக்குறைய தமிழகத்தின் புளியோதரை போல உள்ள இந்த உணவில் சாதத்திற்குப் பதில் கெட்டி அவல் சேர்க்கப்படுகிறது. இதன் செய்முறை எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் 1 கப்
கெட்டிப் புளிக் கரைசல் 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உடைத்த தோல் உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
சன்னா டால் 1 டீஸ்பூன்
வேர்க்கடலைப் பருப்பு 1½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
சிவப்பு மிளகாய்த் தூள் ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 இணுக்கு
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவிய தேங்காய் பூ 2 டீஸ்பூன்
ஃபிரஷ் மல்லி இலைகள் ஒரு கைப்பிடி
சேவ் (Sev) 4 டீஸ்பூன்
லெமன் வெட்ஜ் (Wedge) 3
செய்முறை:
அவலைக் கழுவியெடுத்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசிறி சில நிமிடங்கள் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் திக்கான புளிக்கரைசலை ஊற்றி அதில் வெல்லதைப் பொடித்து சேர்த்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் புளி வெல்லப் பேஸ்ட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறிவிடவும். பின் அவலைக்கொட்டி மெதுவாகக் கிளறி சிறிது நேரம் வேகவிடவும். சரியான பதத்தில் வெந்ததும் கொஜ்ஜு அவலக்கி தயார். அதன் மீது சேவ், மல்லித்தழை, தேங்காய் பூ தூவி, லெமன் வெட்ஜ் செருகி அலங்கரிக்கவும்.
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த கொஜ்ஜு அவலக்கியை நாமும் அடிக்கடி செய்வோம்; உண்டு மகிழ்வோம்.