
திருநெல்வேலி மாவட்டத்தில் பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம் அல்லது கருப்பட்டி மற்றும் ஓலையைக் கொண்டு இந்த பாரம்பரிய பண்டம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பனை மரங்கள் அதிகம் என்பதால் அதை வைத்து இந்த கொழுக்கட்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வார்கள். பனை ஓலை இருந்தால் மட்டும் போதும் இந்த கொழுக்கட்டையை எளிதாக செய்யலாம்.
இந்த கொழுக்கட்டை மிகவும் சுவையாகவும், நறுமணமாகவும் இருக்கும். தற்போது சென்னையிலும் பனை ஓலைக் கொழுக்கட்டை பிரபலம் அடைந்து வருகிறது.
பனை ஓலைக் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கிலோ
சுக்குப் பொடி - சிறிதளவு (விரும்பம் இருந்தால் சேர்க்கலாம்)
தேங்காய் - 1
பனை ஓலை - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி ஊறவைத்து நிழலில் உலர்த்தி, கடையில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்.
* பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு இரண்டு பக்கமும் முனைகளை வெட்டிக்கொள்ளவும். தேவையில்லாத பனை ஓலைகளில் இருந்து நார் இழித்து வைத்து கொள்ளவும்.
* தேங்காயை பூ போல துருவிக்கொள்ளவும்.
* பனை வெல்லம் அல்லது கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். (ஏனெனில் கருப்பட்டியில் தூசி இருக்கும்.)
* ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு அதனுடன் துருவிய தேங்காய், சுக்குப்பொடி சேர்த்து நன்றாக கலந்த பின்னர் காய்ச்சிய கருப்பட்டியை ஊற்றி நன்றாக கலக்கவும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாவை நன்றாக கட்டியில்லாமல் பக்குவமாக பிசைய வேண்டும்.
* மறுபுறம் ஒரு அடிகனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பனை ஓலை வெட்டியதில் மீதமுள்ள தேவையில்லாத ஓலைகளை போடவும்.
* வெட்டி வைத்துள்ள பனை ஓலையின் மடிப்பான பகுதியில் நடுவில் மாவை சிறிதளவு வைத்து மற்றொரு ஓலையால் சேர்த்து மூடவும். அதன் மேல் இன்னொரு பனை ஓலையை வைத்து இரண்டையும் சேர்த்து மாவு வெளியே வராதபடி ஓலையை நாரில் கட்டி விடவேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்யவேண்டும்.
* செய்து வைத்தவைகளை பாத்திரத்தில் அடுக்கி வைத்து மூடி போட்டு 25 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
* இப்போது சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.