
ரெசிபி இதோ...
டலிடாய் என்பது அரிசி சாதத்தில் பிசைந்து அல்லது சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக சேர்த்து கொங்கணி மக்களால் உண்ணப்படும் சுவையும் சத்தும் நிறைந்த ஓர் உணவு. வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்படும் இந்த உணவை எப்படி தயாரிக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
டலிடாய் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.துவரம் பருப்பு 1 கப்
2.பச்சை மிளகாய் 2
3.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
4. கடுகு ¼ டீஸ்பூன்
5.பெருங்காயம் ¼ டீஸ்பூன்
6.கறிவேப்பிலை 2 இணுக்கு
7.லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன்
8.கொத்தமல்லி இலைகள் 1 டேபிள் ஸ்பூன்
9.காய்ந்த சிவப்பு மிளகாய் 3
10.உப்பு 1 டீஸ்பூன்
11.தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பை தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பருப்பை பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பின் அதில் உப்பு, மஞ்சள் தூள் பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். வேகவைத்த பருப்பை கனமான கரண்டியால் அழுத்தி நன்கு மசித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெடித்ததும் அதை மசித்து வைத்த பருப்பில் கொட்டிக்கலக்கவும். கிரேவி பதத்திற்கு கலந்து அதன் மீது லெமன் ஜூஸை ஊற்றி, கொத்தமல்லி இலைகளைத் தூவவும். அரிசி சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையான டிஷ்.
அறு சுவை ஆம் பச்சடி
ஒரு மாங்காயை தோல் சீவி சதைப்பகுதியை துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வேப்பம் பூ, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
கடுகு வெடித்து, மற்றவை சிவந்து வந்ததும் அதனுடன் துருவி வைத்துள்ள மாங்காயை சேர்த்து வதக்கவும். கால் டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து மாங்காயை வேகவிடவும். மாங்காய் வெந்ததும், முப்பது கிராம் வெல்லத்தை பொடித்து அதனுடன் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் அனைத்தையும் ஒரு சேர கிளறிவிட்டு இறக்கவும்.
டலிடாய் கிரேவி சேர்த்துப் பிசைந்த சாதத்திற்கு இந்த 'ஆம்' (மாங்காய்) பச்சடியை தொட்டு, சேர்த்து உண்ண சுவை அபரிமிதமாயிருக்கும்!