
குளிர் நேரத்தில் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் 'பொட்டட்டோ சீஸ் கார்லிக் டிக்கி' மற்றும் அதற்கு தொட்டுக்கொள்ள க்ரீன் சட்னி செய்து அசத்தலாம் வாங்க.
பொட்டட்டோ சீஸ் கார்லிக் டிக்கி
தேவையான பொருள்கள்:
வேகவைத்து நசுக்கிய உருளைக் கிழங்கு 1½ கப்
துருவிய பதப்படுத்தப்பட்ட சீஸ் ½ கப்
உரித்து நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் ¼ கப்
கொத்தமல்லி இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
மக்காச் சோள மாவு 2 டேபிள் ஸ்பூன்
மெல்லிசா சீவிய பாதாம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்
எண்ணெய் தவிர மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும். அதிலிருந்த கலவையை ஒரே சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் தட்டையாக வட்ட வடிவத்தில் டிக்கிகளாகத் தட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஒரு நேரத்தில் மூன்று அல்லது நான்கு டிக்கிகளைப் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவிடவும். இரண்டு புறமும் கோல்டன் கலரில் சிவந்து வந்ததும் வெளியில் எடுத்து, எண்ணெய் உறிஞ்சக் கூடிய பேப்பரில் சிறிது நேரம் வைக்கவும். பிறகு பச்சை நிற சட்னி அல்லது தக்காளி கெச்சப் தொட்டு சூடாக சுவைத்து மகிழவும்.
க்ரீன் சட்னி
ஒரு கப் ஃபிரஷ் புதினா இலைகளை சிறிது எண்ணையில் வதக்கி எடுக்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ்டட் சன்னா டால், ஒரு டீஸ்பூன் சீரகம், 2 கப் ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள், ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், உரித்த பூண்டு பல் 5, நறுக்கிய இஞ்சி துண்டுகள் ஒரு டீஸ்பூன், 3 பச்சை மிளகாய்கள், தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் மசிய அரைத்து எடுக்கவும்.
அதில் கடுகு, இரண்டு சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும். பொட்டட்டோ சீஸ் கார்லிக் டிக்கிக்கு தொட்டுக்கொள்ள க்ரீன் சட்னி ரெடி!