சமீபகாலமாக ஆங்காங்கே அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதனால் மழைக்கு இதமாக இன்னைக்கு சூப் ரெசிபிஸ் பற்றி பார்க்கலாம். இந்த சூப் சுவையாகவும் இருக்கும், சளி, இருமல் போன்ற பிரச்னையை போக்கும் மருந்தாகவும் பயன்படும். சரி வாங்க, வீட்டிலேயே சிம்பிளா சூப் ரெசிப்பீஸ் எப்படி பண்ணுறதுன்னு பாக்கலாம்.
வெஜிடபிள் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட்-1
பீன்ஸ்-10
சோளம்-1/2கப்
வெங்காயம்-1/4கப்
அரைத்த சோளம்-1/2 கப்.
எண்ணெய்- தேவையான அளவு.
பூண்டு-2 பல்.
கொத்தமல்லி- சிறிதளவு.
வெஜிடபிள் சூப் செய்முறை விளக்கம்:
முதலில் ½ கப் சோளத்தை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 2 பல் பூண்டு பொடியாக நறுக்கியதை சேர்க்கவும். அத்துடன் 1/4கப் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது இத்துடன் கேரட், பீன்ஸ், சோளம் ஆகியவற்றை சேர்க்கவும்.
இப்போது நாம் அரைத்து வைத்திருக்கும் சோளத்தையும் இத்துடன் சேர்க்கவும். நன்றாக வதக்கியதும் 5 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு மூடிவைத்து 20 நிமிடம் வேக விடவும். இதை இன்னும் கெட்டியாக்க 1 தேக்கரண்டி சோளமாவில் 1/4கப் தண்ணீர் சேர்த்து கலந்து அதை சூப்புடன் சேர்க்கவும். இது இன்னும் 5 நிமிடம் வேகட்டும். கடைசியாக கொஞ்சம் மிளகு தூள் வாசனைக்காக சேர்க்கவும். இப்போது இதை ஒரு பவுலில் ஊற்றி மேலே மல்லி இலை தூவி பரிமாறவும். அவ்வளவுதான். சுவையான வெஜ் சூப் தயார். நீங்களும் வீட்டிலே செஞ்சிட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
மிளகு பூண்டு சூப் செய்ய தேவையான பொருட்கள்:
மிளகு-15
பூண்டு-6
வெண்ணெய்-1 தேக்கரண்டி
சோளமாவு-1 தேக்கரண்டி
தேவையானை அளவு-உப்பு.
சீரகதூள்- ½ தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
மிளகு பூண்டு சூப் செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் 15 மிளகு 6 பல் பூண்டை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மிளகு, பூண்டை வெண்ணெய்யில் சேர்த்து கிண்டவும். இப்போது இதில் 4 டம்ளர் தண்ணீரை சேர்த்து கொள்ளவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் சோளமாவு 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் கலக்கி சூப்பில் சேர்த்து கொள்ளவும். இது சூப்புக்கு திக்னஸை கொடுக்கும். இதற்கு மேலே தேவையான அளவு உப்பு, சீரகத்தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லியை சேர்த்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். இந்த சூப்பை சளி, இருமல், தொண்டை பிரச்னை இருப்பவர்களுக்கு கொடுக்கலாம்.