பாலில் இருந்து எடுக்கப்படும் பாலாடைக்கட்டி என்று சொல்லப்படும் சீஸ் ஆகும். இந்த சீஸை உணவில் சேர்த்ததும் சாதாரணமாக இருக்கும் உணவிற்கு கூட தனி சுவையை தரும். உலகம் முழுவதிலும் எண்ணற்ற சீஸ் பிரியர்கள் உண்டு. இந்த சீஸில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சுவையும் உண்டு. அவற்றை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
காட்டேஜ் சீஸ் (Cottage cheese)
இந்த சீஸ் நம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவது. இதன் பூர்வீகம் இந்தியாவாகும். இந்த வகை சீஸ் பாலில் இருந்து கடைந்து எடுக்கப்படுவது ஆகும். இது மிகவும் மிருதுவாகவும், அதிக சத்துக்களையும் கொண்டது. இந்த சீஸ் சுலபமாக ஜீரணமாக கூடியது. இதில் சிறிது இனிப்பு சுவையும் உண்டு. இதை வைத்து பாலக் பன்னீர், சாலட், பன்னீர் டிக்கா போன்றவை செய்யப்படுகிறது.
மொசரல்லா சீஸ் (Mozzarella cheese)
பீஸாவோ அல்லது பாஸ்தாவோ மொசரல்லா சீஸ் இல்லாமல் நினைத்து பார்க்க முடியாது. இந்த சீஸ் வகை தெற்கு இத்தாலியில் உருவானது. இதை எருமை பாலில் இருந்து தயாரிக்கின்றனர். இப்போதெல்லாம் பசு மற்றும் ஆட்டினுடைய பாலில் இருந்து தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். இது மிருதுவாகவும், மென்று சாப்பிடக்கூடிய தன்மையை உடையது. இதை வைத்து லசக்னா, சாலட், பீஸா போன்ற உணவுகளை தயாரிக்கலாம்.
ஃபீட்டா சீஸ் (Feta cheese)
சாலட் தயாரிக்க இந்த சீஸ் வகையையே பயன்படுத்துவார்கள். இது சற்று புளிப்பு மற்றும் உப்பு கலந்த சுவையை உடையது. இதை ஆட்டின் பாலில் இருந்து செய்யப்படுகிறது. இந்த சீஸ் வகை கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்டது. இது மிருதுவான தன்மையை கொண்டது குடை மிளகாய், ஆலிவ், நட்ஸுடன் சேர்த்து செய்யும்போது சுவை மிகுந்ததாக இருக்கும்.
செட்டர் சீஸ் (Cheddar cheese)
செட்டர் சீஸ் அதிக சத்துக்களைக் கொண்டது அதே சமயம் அதிக கலோரிகளும் இருக்கிறது. இங்கிலாந்தில் செட்டர் என்ற கிராமத்தை பிறப்பிடமாக கொண்டது இந்த சீஸ். இந்த வகை சீஸ் கிரீமியாகவும், மிருதுவான தன்மையையும் கொண்டது. எவ்வளவு பழமையான சீஸ்ஸாக இருக்கிறதோ அதை பொருத்து இதன் மதிப்பு கூடுகிறது.
பர்மேசன் சீஸ் (Parmesan cheese)
இந்த வகை சீஸ் வடக்கு இத்தாலியில் உருவானதாகும். இந்த சீஸ் வகை 12 முதல் 36 மாதங்கள் வைத்து இறுகினால்தான் துருவும்போது முத்து முத்தான வடிவத்தை தரும். பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸிற்கு அதிகமாக பிளேவர் உள்ளதால் இதை மக்ரோனி, பாஸ்தா, சாலட், சூப் ஆகியவற்றில் பயன்படுத்துவார்கள்.
ஹவுடா சீஸ் (Gouda cheese)
இந்த வகை சீஸை Wine உடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இதை ‘ஹவுடா’ என்று உச்சரிக்க வேண்டும். இது நெதர்லாந்தில் உள்ள ஹவுடா நகரத்தில் உருவாவதால் அந்த பெயர் பெற்றது. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸ் வகை கிரீமியான தன்மையை உடையது. எவ்வளவு காலம் இந்த சீஸிற்கு வயதாகிறதோ அவ்வளவு சுவையை பெறும். இந்த வகை சீஸை குறைந்த பட்சம் 4 வாரமும் அதிகப்பட்சம் 36 வாரமும் வைத்து பயன்படுத்துவார்கள். மக்ரோனி, சாலட், சூப் போன்றவை செய்தால் நன்றாக இருக்கும்.