வட இந்திய உணவுகளில் ரொட்டி வகைகள் பிரபலமானவை. அவற்றுள் நான் மற்றும் தந்தூரி ரொட்டிக்கு அடுத்தபடியாக, மிஸ்ஸி ரொட்டி ஒரு பிரபலமான இந்திய உணவு. இது பஞ்சாபி மற்றும் ராஜஸ்தானி உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவாகும். மிஸ்ஸி ரொட்டி என்பது முழு கோதுமைமாவு, கடலை மாவு மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையுடன் தயாரிக்கப்படும் ருசியான தட்டை வகை ரொட்டியாகும்.
மிஸ்ஸி ரொட்டி வட இந்திய நகரங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் செய்யப்படுகிறது. தமிழில் இது பெசன் ரொட்டி என்றும் அழைக்கப்படுகிறது, காரணம் இதில் அவசியம் சேர்க்கப்படும் கடலைமாவு. இது இந்த ரொட்டியின் மிருதுத்தன்மை மற்றும் ருசிக்கு உதவுகிறது. மேலும் மிஸ்ஸி ரொட்டியில் சிவப்பு மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் மஞ்சள் தூள் போன்ற பல உடல் நலம் காக்கும் மசாலாக்கள் சேர்க்கப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி உண்ணலாம்.
மிஸ்ஸி ரொட்டியில் சேர்க்கப்படும் பொருள்களும் செயல்முறையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சற்று மாறுபடலாம். ஆனால் கடலைமாவு மற்றும் கோதுமைமாவு இதற்கு அடிப்படை. மிஸ்ஸி ரொட்டி செய்முறை பார்ப்போம்.
தேவை:
கோதுமை மாவு - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் -2
கொத்தமல்லித்தழை -1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி - 1 ஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன் ( பொடித்தது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மாங்காய் பொடி (ஆம்சூர்) - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2 (தேவைப்பட்டால்)
முருங்கை கீரை தண்டுக்கீரை அல்லது அரைக்கீரை - 1 கைப்பிடி அளவு
செய்முறை:
கோதுமைமாவு, கடலைமாவு இரண்டையும் நன்றாக சலித்து உப்பு கலந்து கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசையவும். கீரைகளை நன்கு அலசி பொடி பொடியாக அரிந்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மல்லி செடி மிளகாய்களை பொடியாக நறுக்கி இவை அனைத்தையும் கோதுமைமாவு கலவையில் கலந்து கூடவே இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், ஓமம், கஸ்தூரி மேத்தி, ஆம்சூர் பொடி போன்ற அனைத்தையும் சேர்த்து சப்பாத்திமாவு போல நன்கு பிசைந்து வைக்கவும். இந்த மாவை பெரிய எலுமிச்சை அளவு உருட்டைகளாகப் பிடித்து மெலிதாக சப்பாத்தி போல போட்டு இருபுறமும் நெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு வெண்ணெய் சீஸ் வகைகள் பயன்படுத்தினால் ருசி கூடும். குறிப்பாக இதை சூடாக சாப்பிட்டால் மென்மையாக இருக்கும். இது குறைந்த கலோரியுடன் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் சீரான எடை பராமரிப்புக்கு சிறந்தது.