உழைக்கிற எவருக்கும் வெற்றி நிச்சயிக்கப்பட்டதுதான். ஆனால் வெற்றியை அடைய தோல்வியும் அவசியம். தோல்விகள்தான் வெற்றியின் உச்சத்தைத் கூட்டுகிறது. மனிதர்களின் அறிவு, திறமை, தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கு உதவாது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையே அவனை முழு மனிதனாக்கும்.
அது ஒரு மிகப்பெரிய நிறுவனம். அங்கு திடீரென்று எதிர்பாராத நஷ்டம். நிறுவனம் ஆடிப்போனது. போர்டு மீட்டிங் போடப்பட்டது. நஷ்டத்திற்குக் காரணம் கவனமின்மையும், அறியாமையும் என ஒருமனதாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பிரச்னையை தீர்த்து விடலாம் என தெளிவு பிறந்தது. அது லட்சக்கணக்கான பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனம். பங்குதாரர்கள் நஷ்டம் பற்றிக் கேள்விப்பட்டால் நிறுவனத்தின் மதிப்பு போய்விடும். எனவே இதை பங்குதாரர்களுக்குத் தெரியாமல் சமாளித்துக்கொள்ள ஏகமனதாய் முடிவெடுத்தார்கள்.
இந்த நிறுவனத்தின் சேர்மன் இப்போது பேசினார் "முதலில் எப்படியாவது சமாளிக்கலாம் என்ற வார்த்தையை ஒதுக்கிக் தள்ளுங்கள். உறுதியில்லாதவன் வாயிலிருந்து வரும் சொல் அது. நம் நிறுவனம் பெரிய தோட்டம். பங்குதாரர்கள்தான் அதன் விதைகள். விதைக்கு சொந்தக்காரர்கள் நமது பங்குதாரர்கள். நாம் நிர்வாகிகள்தான். எஜமானர்கள் அல்ல. கவனமின்மைக்கும் காரணம் நாம். தவறை சரி செய்யும் நம்பிக்கை நம்மிடம் உள்ளது.
தோட்டத்தில் ஒருபுறம் பழங்களை அழுக விட்டதற்கு நாம்தான் பொறுப்பு. அழுகின பழங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை. தோல்விகளை நாம் ஒப்புக் கொள்வோம். வெற்றி பெறமுடியும். விதைகளைக் கொடுத்தவர்களுக்கு பழங்களின் நிலைமை பற்றிச் சொல்வதே நியாயம். நமக்கு அடிபட்ட காயம் நல்ல அனுபவம். அடிபட்ட அந்த காயம் புரையோடி அறுவைச் சிகிச்சைவரை செல்ல எனக்கு விருப்பமில்லை" என்றார்.
உறுப்பினர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். பங்குதாரர்களுக்கு விவரம் அழுத்தமாகச் சொல்லப் பட்டது. தவறுக்காக வருத்தமும், வளர்ச்சிக்கான முயற்சியும் விளக்கப்பட்டது. அந்த நிறுவனம் தெரிவித்த விதம் பங்குதாரர்களுக்குப் பிடித்துப் போனது. நிறுவனம் வெற்றி பெறும் என்பதை அவர்கள் அழுத்தமாக நம்பினார்கள். அவர்கள் நம்பிக்கை பொய்க்கவில்லை. சில ஆண்டுகளிலேயே பிரச்னைகள் தீர்ந்து நிறுவனம் பிடிக்க முடியாத உயரத்தை எட்டியது. சேர்மனின் ஒழுக்கம் அவரை மட்டுமல்ல அவர் நிறுவனத்தையே உயர்த்தியது.