பாகற்காய் பிட்லை - உருளைக்கிழங்கு பொடிமாஸ்!

arokya samayal tips!
samayal tipsImage credit - youtube.com
Published on

பாகற்காய் பிட்லை என்பது ஒரு பாரம்பரியமான குழம்பு வகைகளில் ஒன்று. சாம்பார் போலவே இருந்தாலும் இதில் சுவை மற்றும் செய்முறையில் சில வேறுபாடுகள் உள்ளன. பாகற்காயுடன் கொண்டைக்கடலையும் சேர்த்து இந்த பிட்லை வைக்கும் பொழுது ருசி கூடும்.

பாகற்காய் பிட்லை:

பாகற்காய் கால் கிலோ 

துவரம் பருப்பு 4 ஸ்பூன்

உப்பு தேவையானது

புளி நெல்லிக்காய் அளவு

வெல்லம் சிறு கட்டி

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

வறுத்து அரைக்க: 

தனியா 2 ஸ்பூன் 

கடலைப்பருப்பு 1 ஸ்பூன் 

துவரம் பருப்பு 1 ஸ்பூன்

மிளகு 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் 4

தேங்காய் துருவல் 1/4 கப்

தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, வெந்தயப்பொடி 

கொண்டைக்கடலை சேர்ப்பதாக இருந்தால் அதனை 6 மணி நேரம் ஊற வைத்து கழுவி குக்கரில் அதற்குத் தேவையான உப்பு சேர்த்து வேகவிட்டு பிட்லை கொதிக்கும் பொழுது சேர்த்து விடவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி பண்ணி வைத்துக் கொள்ளவும்.

பாகற்காயை அலம்பி வட்ட வட்டமாகவோ அல்லது சிறு துண்டுகளாகவோ நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை குழைவாக வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலில் கடுகு, வெந்தயப் பொடி, கருவேப்பிலையை நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். அதில் புளியை இரண்டு கப் நீர் விட்டு கரைத்து விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். புளி வாசனை போனதும் குழைவாக வெந்த துவரம் பருப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு துண்டு வெல்லமும் போட்டு கொதிக்கவிட்டு கிளறி இறக்கவும். மிகவும் ருசியான பாகற்காய் பிட்லை தயார்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ்:

உருளைக்கிழங்கு அரை கிலோ 

உப்பு தேவையானது 

பச்சை மிளகாய் 4

இஞ்சித் துருவல் சிறிது

தேங்காய் துருவல் 1/2 கப்

எலுமிச்சம் பழம் 1

பெருங்காயத்தூள் சிறிது

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீமை கத்தி மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடுறாங்களா? எங்கே?
arokya samayal tips!

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும் அல்லது சிறிது ஆறியதும் கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். இஞ்சி சிறிய துண்டை எடுத்து தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து துருவிய உருளைக்கிழங்கையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, துருவிய இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கி எலுமிச்சம் பழச்சாறு பிழிய மிகவும் ருசியான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com