சப்புக்கொட்ட வைக்கும் பாகற்காய் புளிக்குழம்பு!

பாகற்காய் புளிக்குழம்பு
பாகற்காய் புளிக்குழம்புImage credit - youtube.com

ச்சைக் காய்கறி வகைகள் அனைத்துமே உடலுக்கு நலன் என்பது தெரிந்தாலும் கசப்பு சுவை உள்ள பாகற்காயை கண்டாலே சிலருக்கு ஆகாது. ஆனால் இந்த பாகற்காய் குடலில் உள்ள பூச்சிகளை ஒழிக்கவும், நீரிழிவு நோய் பாதிப்பைக் குறைக்கவும் சிறந்த  நிவாரணியாக உள்ளது என்பது தெரிந்தால் நிச்சயம் இந்த காயை ஒதுக்க மாட்டோம். பாகற்காய் கசப்பு சுவையானதால்தான் நாம் விரும்புவதில்லை. ஆனால் அதையே இது போன்ற புளிக் குழம்பாக வைத்து தரும்போது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் பாகற்காய் புளிக்குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

 
தேவையானவை:
பாகற்காய் - கால் கிலோ
புளி - தேவைக்கு
நல்லெண்ணெய் -  2 குழிக்கரண்டி
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 8 பல்
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - சிறிது
தக்காளி - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3
வெல்லம் - சிறிது
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
கல்உப்பு- தேவைக்கு

செய்முறை:
சிறிது புளியை சுத்தம் செய்து  பாத்திரத்தில் நீரூற்றி ஊற வைக்கவும். பாகற்காய்களை கழுவி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு வட்டம் வட்டமாக நறுக்கி வைக்கவும். மண்சட்டி கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை போட்டுப் பொரிந்ததும் இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு சிவக்க வதக்கி பின் வெட்டி வைத்த பாகற்காயை அதனுள் போட்டு தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு  வதக்கவும். இதுபோல வதக்குவதால் கசப்புத் தன்மை குறையும். இதில் சிறிதாக நறுக்கிய தக்காளிகளையும் போட்டு  வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
பாகற்காய் புளிக்குழம்பு

வதக்கியபடியே தேங்காய், தனியாத்தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து மிக்சியில் மைய அரைக்கவும். வதங்கிய காய் கலவையில் அரைத்த இந்த விழுதைப் போட்டு தேவையான புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது மேலே தெறிக்கும் என்பதால் மூடியை பாதியாக போட்டு மூடவும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து சிறிது வெல்லத்தை சேர்த்து மீண்டும் கொதித்து கெட்டியாகி மேலே எண்ணெய் மிதந்ததும் இறக்கி சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நாக்கு சப்புக்கொட்டும்.

குறிப்பு- இதில் தேங்காய், வெல்லம் சேர்ப்பது அவரவர் விருப்பம். மண்சட்டி, நல்லெண்ணெய், கல் உப்பு சுவை கூட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com