கேரட் பிரட் அல்வா
கேரட் பிரட் அல்வா

குழந்தைகள் விரும்பும் கேரட் பிரட் அல்வா!

ற்போது திருமணங்கள், உணவகங்கள் மற்றும் விழாக்களில் ஒரு சிறிய கப்பில் நெய் மணக்க  அல்வா வைப்பது வழக்கமாகி வருகிறது. அன்று கேசரி இருந்த இடத்தை இன்று இந்த பிரட் அல்வா பிடித்து விட்டது. வீட்டில் கூட குழந்தைகள் கேட்டதும் செய்யக் கூடிய எளிமையான ரெசிபிதான் இது. எப்போதும் செய்யும் முறையைத் தவிர்த்து குழந்தைகள் சாப்பிட மறுக்கும் சத்தான காய்களையும் அவர்கள் விரும்பும் விதத்தில் தருவது சிறப்பு. இதோ இந்த கேரட் கலந்த பிரட் அல்வா போல்.

தேவையான பொருட்கள்:
பால் - 3 கப்
பிரட் - 10 துண்டுகள்
கேரட் - 2
நெய் - 3 டே ஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 10
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டை மண் போக கழுவி துருவியால் துருவி சிறிது பால் சேர்த்து  குக்கரில் ஒரு விசில் விட்டு  வேகவைத்து எடுக்கவும்.

பிரட் துண்டுகளை சிறிது நெய் விட்டு வதக்கி மிக்ஸியில் போட்டு தூளாக்கவும். இப்போது அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கை விடாமல் கிண்டி பால் சுண்டி கெட்டியான கோவா பதத்திற்கு வந்ததும் அதை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் வேறொரு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சைகளை  வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
பஞ்சாபி ஸ்டைலில் பனீர் புர்ஜி!
கேரட் பிரட் அல்வா

அதே கடாயில் நாட்டுச் சர்க்கரை  (வெல்லமும் சேர்க்கலாம்) சர்க்கரை போட்டு  ஒரு கப் நீரை ஊற்றி கரைந்து கொதிக்கத் துவங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பிரட் தூளை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து விடவும். கூடவே பாலில் வெந்த  கேரட் கலவையையும் சேர்த்து நன்கு கிளறவும்.

பின் அதில் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்த கெட்டியான பாலை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். அவ்வப்போது நெய் விட்டு  கடாயில் ஒட்டாமல் வரும் வரை மிதமான தீயில் பக்குவமாக கிளறவும். இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கி மேலே மீதமுள்ள நெய்யை ஊற்றி ஆறியதும் பரிமாறலாம். சுவையான அல்வா தயார்.

பி. கு -  இதில் கேரட் இருப்பதால் எந்த ஃபுட்கலரும் சேர்க்காமலேயே குழந்தைகளைக் கவரும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com