
கேரள காலை உணவான கேரட் மணிக்கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ருசியோ அதிகம். சிம்பிள் பட் வெரி டேஸ்டி. எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
கேரட் மணிக்கொழுக்கட்டை:
அரிசி மாவு ஒரு கப்
தேங்காய் அரை கப்
கேரட் 2
பச்சை மிளகாய் 1
கொத்தமல்லி சிறிது
உப்பு தேவையானது
தனியா தூள் ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
தேங்காய், துருவிய கேரட், சிறிது உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வாணலியில் இரண்டு கப் தண்ணீர்விட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து நடுக் கொதி வந்ததும் அரிசி மாவைத் தூவி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். இறக்கி சிறிது சூடு ஆறியதும் கையில் தேங்காய் எண்ணெய் தொட்டுக் கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு ஏழெட்டு நிமிடங்கள் ஆவியில் நன்கு வேகவிடவும். வெயிட் போடவேண்டாம்.
வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ரெண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு பொரிந்ததும் வெந்த மணி கொழுக்கட்டைகளை சேர்த்து தனியாத் தூள், கொரகொரப்பாக அரைத்து வைத்த கேரட், தேங்காய், பச்சை மிளகாய் கலவையை சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி எலுமிச்சைசாறு கலந்து சட்னியுடன் பரிமாறவும்.
உரப்பு சட்னி:
பூண்டு 1 பல்பு
காய்ந்த மிளகாய் 6
தக்காளி 2
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு ,கடலை பருப்பு 2/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது
சூடான தண்ணீரில் பூண்டைப் போட்டு, தக்காளியும் நறுக்கி போடவும். காம்பு நீக்கிய காய்ந்த மிளகாயையும், புளியையும் உருட்டிப் போடவும். 15 நிமிடங்கள் கழித்து தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து இரண்டு கிளறு கிளறி இறக்க காரசாரமான உரப்பு சட்னி தயார்.