செட்டிநாடு ஸ்டைலில் பாசிப்பருப்பு அல்வா செய்யலாம் வாங்க! 

Paasiparuppu Halwa
Chettinad Paasiparuppu Halwa

எப்போதும் ஒரே மாதிரியான அல்வா வகைகளை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒரு முறை இந்த செட்டிநாடு ஸ்டைல் பாசிப்பருப்பு அல்வா முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்டால், தாராளமாக இந்த ஸ்வீட்டை நீங்கள் செய்து கொடுக்கலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு பால், சர்க்கரை என எதுவுமே தேவையில்லை என்பதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. பாசிப்பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஊட்டச்சத்து இதிலிருந்து கிடைக்கிறது. சரி வாருங்கள், செட்டிநாடு ஸ்டைல் பாசிப்பருப்பு அல்வா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்: 

  • பாசிப்பருப்பு - 1 கப்

  • வெல்லம் - 2 கப்

  • தண்ணீர் - தேவையான அளவு

  • துருவிய தேங்காய் - கால் கப்

  • முந்திரி - 8

  • நெய் - 3 ஸ்பூன்

  • ரவை - 1 ஸ்பூன்

  • ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன்

  • உப்பு - சிறிதளவு

பாசிப்பருப்பு அல்வா செய்முறை: 

முதலில் பாசிப்பருப்பை நன்கு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும். பின்னர் குக்கரில் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு இறக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் குக்கரில் காற்று நீங்கியதும் பாசிப்பருப்பை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அதில் ஒரு கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள். வெல்லம் கரைந்ததும் அதை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். 

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் துருவிய தேங்காய் மற்றும் ரவை சேர்த்து நல்ல மணம் வரும்வரை வறுக்க வேண்டும். 

பின்னர் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை வடிகட்டி ஊற்றுங்கள். அத்துடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து கரண்டியால் கட்டிகள் இல்லாமல் கிளறிக் கொண்டே இருங்கள். நடுவில் கொஞ்சமாக உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளற வேண்டும். 

இதையும் படியுங்கள்:
World Bee Day 2024: தேனீ இயற்கையின் ராணி!
Paasiparuppu Halwa

வாணலியில் ஒட்டாமல் அல்வா நன்கு திரண்டு வரும்போது அடுப்பை அணைத்தால், வேற லெவல் சுவையில் செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா ரெடி. இதன் சுவை நன்றாக இருக்கும். அனைவருமே விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com