World Bee Day 2024: தேனீ இயற்கையின் ராணி!

Bee
World Bee Day 2024

ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலகம் முழுவதும் உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சமநிலையைப் பராமரிப்பதில் தேனீக்களின் பங்களிப்பை இந்த சிறப்புமிக்க நாள் நினைவூட்டுகிறது. தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்வது முதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது வரை, இந்த சிறிய உயிரினங்கள் நம் வாழ்விலும், ஒட்டுமொத்த கிரகத்தை பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன.   

தேனீக்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக தேனீ தினம், முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையால் 2017ல் கொண்டாடப்பட்டது. மே 20 ஆம் தேதி நவீன தேனி வளர்ப்பின் முன்னோடியும், தேனி வளர்ப்புத் துறையில் நிபுணராக விளங்கும் ஸ்லோவேனியா தேனி வளர்ப்பாளருமான ‘ஆன்டன் ஜான்சா’வின் பிறந்தநாளே உலக தேனீ தினத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 

தேனீக்கள் பூமியில் உள்ள மிக முக்கிய மகரந்தச் சேர்க்கையாளர்களில் ஒன்றாகும். ஒரு பூவின் ஆண் பாகங்களிலிருந்து மகரந்தத்தை மற்றொரு பூவின் பெண் பாகங்களுக்கு மாற்றுவதன் மூலம் அவை பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்தை எளிதாக்குகின்றன. விதைகள், பழங்கள் மற்றும் காய்களின் உற்பத்திக்கு இந்த செயல்முறை அவசியம். உண்மையில் நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மூன்று உணவுகளில் ஒன்று, தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு உருவாவதாக சொல்லப்படுகிறது.    

உணவு உற்பத்திக்கு மட்டுமின்றி தேனீக்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன. காட்டுப்பகுதிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு வாழ்விடங்களையும் உணவு ஆதாரங்களையும் வழங்குகிறது. எனவே தேனீக்களின் வீழ்ச்சி பல்லுயிர் பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

துரதிஷ்டவசமாக உலகெங்கிலும் தேனீக்கள் மக்களால் ஆபத்துக்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன. நகரமயமாக்கல், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணத்தால், அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு உயிர் வாழும் சூழல் மோசமாக உள்ளது. மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளால் நிலமை மேலும் மோசமாகின்றன. 

உலக தேனீ தினம், தேனீக்களுக்கு ஏற்படும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேனீக்களின் அழிவை குறைக்கக்கூடிய செயல்களை ஊக்குவிக்கவும் கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில், அனைவரும் தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவை இந்த உலகில் நலமுடன் வாழ நீங்களும் உங்களால் முடிந்த பங்கை ஆற்றுங்கள். தேனீக்களுக்கு உகந்த இடங்களை ஏற்படுத்துதல், தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஆகியவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சில முயற்சிகள் ஆகும். 

இதையும் படியுங்கள்:
கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த நபருக்கு 10 வயது குறைந்தது! எப்படி சாத்தியம்?
Bee

உலக தேனீ தினம், தேனீக்களின் கலாச்சார மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தேனீ வளர்ப்பு நடைமுறைகள் மற்றும் தேன் உற்பத்தி ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தேன், உணவாகவும் மருந்தாகவும் மத மற்றும் கலாச்சார சடங்குகளிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. உலக தேனீ தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனிதர்களுக்கும் தேனீக்களுக்கும் இடையேயான, ஆழமான தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். 

எனவே இந்த உலக தேனீ தினத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, விழிப்புணர்வைப் பரப்பி, தேனீக்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துரைத்து, சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்போம். 

உலக தேனீ தின நல்வாழ்த்துக்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com