Chetty Nadu special sweet that surpasses Alva!
Ukkarai sweets

அல்வாவை மிஞ்சும் செட்டி நாடு ஸ்பெஷல் ஸ்வீட்!

Published on

ல்வாவை மிஞ்சும் சுவையில் இருக்கும் எங்கள்  செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரையை வீட்டிலேயே  செய்யலாமென  என் செட்டி நாட்டு சினேகிதி சொல்ல,  விபரம் கேட்டேன். கூறினாள். இதோ உங்களுக்காக…

தேவையான பொருட்கள்:

நல்ல பாசிப்பருப்பு - 1 கப்

ரவை -    1/2 கப்

பொடித்த வெல்லம் - 3 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

நெய் -  1  கப்

முந்திரி பருப்பு - 15 (ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்)

ஏலக்காய் பொடி - 1  டீஸ்பூன்

தண்ணீர்  தேவையானது

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சற்றே சூடானதும்,  பாசிப்பருப்பை போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்து கொள்ளவும். பாசிப்பருப்பு பொன்னிறமாக வறுபட்டு வாசனை வந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்ளவும்.

வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை நன்றாக அலசவும். அலசிய பாசிப்பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

மிதமான தீயில் வைத்து குக்கரில் மூன்று விசில் வந்து அடங்கியவுடன்,  பாசிப்பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், ஒடித்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தை வைத்து அதில்  வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து தீயை மிதமாக வைத்து வெல்லம் கரையும் வரை கிளறிவிடவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும், கீழே இறக்கி சற்று ஆறியபின், தூசி இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும்,  அரை கப் அளவிற்கு நெய் சேர்த்து உருகியதும் தீயை மிதமாக வைத்து அதில் ரவையைப் போட்டு வாசனை போக பொன்னிறமாக வறுக்கவும்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் ABC அல்வா-சோன்பப்டி செய்யலாம் வாங்க!
Chetty Nadu special sweet that surpasses Alva!

ரவை பொன்னிறமாக வறுபட்டவுடன் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

ரவையும், தேங்காயும் பொன்னிறமாக வறுபட்டு வாசனை வந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு விடாமல் கலக்கவும்.

பாசிப்பருப்பு மற்றும் ரவை சேர்ந்து திக்கான பதத்திற்கு வந்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறி விட்டுக் கொடுக்கவும்.

ஓரளவிற்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கால் கப் அளவிற்கு நெய் சேர்த்து கலந்த பின், நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான பார்த்தாலே நாவூற வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ரெடியாகிவிடும்.

வேலை கொஞ்சம் ஜாஸ்தியென்றாலும், டேஸ்ட்டும் ஜாஸ்திதான். தீபாவளிக்கு செய்து பார்க்கலாமே..!

logo
Kalki Online
kalkionline.com