
வட இந்தியாவின் பீஹார் மாநில மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் சில விழாக்களில் 'சத் பூஜை'யும் (Chhath Pooja) ஒன்று. இது சூரியக் கடவுளுக்காக நடத்தப்படுவது. இந்தப் பூஜையில் படைப்பதற்காக தயாரிக்கப்படுவது தெக்குவா (Thekua Sweet) ஸ்வீட். இந்த ஸ்வீட் தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தெக்குவா ஸ்வீட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கோதுமை மாவு 2 கப்
2.ரவை ½ கப்
3.பொடித்த வெல்லம் ½ கப்
4.பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
5.நறுக்கிய பாதாம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
6.நறுக்கிய ரைசின்ஸ் 1 டேபிள் ஸ்பூன்
7.நசுக்கிய ஏலக்காய் 4
8.நெய் (desi ghee) ¼ கப்
9. ட்ரை தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
10. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
11. எள் அல்லது கச கசா 2 டீஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
வெல்லத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில், வெல்லம் முழுவதும் கரையும் வரை வைத்திருக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிக்கொண்டிருக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி எடுத்து ஆறவிடவும்.
கோதுமை மாவு, ரவை, பெருஞ்சீரகம், பாதாம் பருப்பு, ரைசின்ஸ், தேங்காய், ஏலக்காய், எள் மற்றும் நெய் அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கைகளால் நன்கு கலந்துவிடவும். பின் அதில் வெல்லக் கரைசலை சேர்த்து மாவைப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்து சரியான பதத்தில் பிசைந்து, பத்து நிமிடங்கள் மூடி போட்டு மூடிவைக்கவும். பின் மாவில் சிறு சிறு உருண்டைகள் செய்யவும். உருண்டையை கையில் வைத்து அழுத்தி, பின் முள் கரண்டி (fork) அல்லது அச்சு (mold) உபயோகித்து வேண்டிய டிசைன்களை அதன் மேல் போட்டுக் கொள்ளவும். இது தெக்குவாவுக்கு கவர்ச்சியான தோற்றம்தர உதவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். மிதமான தீயில் வைத்தே தெக்குவாக்களை மெதுவாகப் போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். பின் திருப்பிப் போட்டு கோல்டன் கலர் வந்ததும் எடுத்து விடவும். தீயை அதிகம் வைத்து தெக்குவாக்களைப் போட்டால் வெளிப்பக்கம் கருகியும் உள்ளே மாவாகவும் இருக்கும். இதைத் தவிர்க்கவே மிதமான தீயில் சுடுவது அவசியம்.
தெக்குவாக்கள் நன்கு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் பண்ணி வைக்கலாம்.