
இன்றைக்கு குளுகுளு இஞ்சி சர்பத் மற்றும் இளநீர் ஐஸ்கிரீம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
இஞ்சி சர்பத் செய்ய தேவையான பொருட்கள்.
இஞ்சி-300 கிராம்
தண்ணீர்-5 கப்
சர்க்கரை-2 கப்
எழுமிச்சை பழம்-1
புதினா இலை-சிறிதளவு
ஐஸ்கட்டி-தேவையான அளவு
சோடா-தேவையான அளவு
இஞ்சி சர்பத் செய்முறை விளக்கம்.
முதலில் 300 கிராம் இஞ்சியை தோல் சீவி விட்டு சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் 5கப் தண்ணீர் வைத்து அதில் நறுக்கிய இஞ்சி 2 கப்பை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது அதை வடிகட்டி வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து லேசாக கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பிறகு ஆறியதும் இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். ஒரு மாதம் வரை இந்த இஞ்சி சிரப்பை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
முதலில் கண்ணாடி கிளாசில் செய்து வைத்த இஞ்சி சிரப்பை சிறிது ஊற்றி அதில் எழுமிச்சை 1 பிழிந்து விட்டுக் கொள்ளவும். இத்துடன் புதினா இலைகள் சிறிது சேர்த்து விட்டு தேவையான அளவு ஐஸ்கட்டிகளை சேர்க்கவும். கடைசியாக சோடா சேர்த்து ஜில்லென்று இஞ்சி சர்பத்தை பருகுங்கள். இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.
இளநீர் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்.
இளநீர் வழுக்கை-1 கப்
தேங்காய் பால்-1 கப்
ஃப்ரஷ் கிரீம்-1 கப்
நாட்டுச்சர்க்கரை-1கப்
வெண்ணிலா எசென்ஸ்-1 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள்-சிறிதளவு
இளநீர் ஐஸ்கிரீம் செய்முறை விளக்கம்.
முதலில் மிக்ஸியில் இளநீர் வழுக்கை 1 கப் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 1 கப் தேங்காய் பால் சேர்த்துவிட்டு அத்துடன் 1 கப் ப்ரஷ் கிரீம் சேர்த்துக் கொள்ளவும்.
இத்துடன் இனிப்பிற்கு நாட்டுச்சர்க்கரை 1 கப், வெண்ணிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி சேர்த்து விட்டு இவற்றை நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது இதை தேங்காய் மூடியில் ஊற்றி, அதற்கு மேல் சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை தூவி, ப்ரிட்ஜில் 10 மணி நேரம் வைத்து எடுத்தால், சுவையான குளுகுளு இளநீர் ஐஸ்கிரீம் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை இந்த கோடையில் வீட்டில் செய்து அசத்துங்கள்.