
ஃப்ரூட் க்ரீம் கப் கேக்
தேவை:
சாக்லேட்கேக்_1 (250 கிராம்)
ஆப்பிள்துருவல் _1/4 கப்
அன்னாசிப்பழத் துருவல் _1/4 கப்
கொய்யாப்பழத் துருவல் _1/4 கப்
மாதுளை முத்துக்கள் _3/4 கப்
சர்க்கரைபாகு _1 கப்
ஃப்ரெஷ்க்ரீம் _1/2 கப்
பூவடிவ கேக் கப் _8
பால் _ சிறிது
செய்முறை: கேக்கை கையால் பிசைந்து, சிறிது பால் ஊற்றி சப்பாத்திமாவு பதத்தில் பிசையவும். பூவடிவ கேக் கப்பில் வெண்ணெய் தடவவும். பிசைந்த கேக் மாவை எட்டு உருண்டைகளாகப் பிரித்து ஒவ்வோர் உருண்டையையும் ஒவ்வொரு பூவடிவ கேக் கப் பிலும் வைத்து அழுத்தவும் ( பூ வடிவ கப் இல்லை என்றால் குழிவான கப்) இதனை அப்படியே கேப் டின்னில் வைத்து 20 முதல் 25 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும்.
வெந்ததும் கப்பைக் கவிழ்த்தால் தனியாக பிரிந்து விடும். இதனை ஆற விடவும். ஆறுவதற்குள் பழங்களை ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு கலக்கவும். இதனை கேக் கப்பில் பாதி அளவு நிரப்பி, மேலே ஆறிய கேக்கை வைத்து அதன் மேல்
ஃப்ரெஷ் க்ரீம் வைத்து அதன் மேல் செர்ரி பழம் வைத்து அலங்கரித்து வைக்கவும். சுவையான நல்ல வடிவுடன் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கேக் தயார்.
வெஜிடபிள் கார கேக்
தேவை:
கடலைமாவு _2 கப்
முட்டைகோஸ் _1 கப் (துருவியது)
காரட் _1 கப் (துருவியது)
தேங்காய்துருவல் _1 கப்
மிளகாய்தூள் _2 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
பெருங்காயத்தூள் _1/2 ஸ்பூன்
கரம்மசாலாத்தூள் _1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் _2 ஸ்பூன்
சமையல்சோடா _2 ஸ்பூன்
புளித்தமோர் _11/2 கப்,
கறிவேப்பிலை, மல்லித்தழை _தேவையான அளவு
செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு துருவிய காரட், கோஸ் தேங்காய்துருவல், உப்பு மிளகாய்தூள், கரம்மசாலா, சமையல்சோடா, மோர் பெருங்காயத்தூள், எண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும், கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் கலந்துக்கொள்ளவும்.
மாவு இட்லி பதத்தில் இருக்கவேண்டும். குக்கர் உள் பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் லேசாக தடவி கலவையை ஊற்றவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து கறிவேப்பிலை, மல்லித்தழை நறுக்கி தூவவும். கத்தியால் துண்டுகள் போட்டு எடுத்தால் கேக் போல மிருதுவாக இருக்கும். இந்த மாதிரி செய்து இரவு டிபனாக எடுத்துக் கொண்டால், சத்தாகவும், சுவையாகவும் இருக்கும்.
ரேடீஸ் மெலன் கேக்
தேவை:
வெள்ளை முள்ளங்கி _ 4
பூசணிக்காய் _1 பத்தை
மில்க்பவுடர் _2 ஸ்பூன்
சர்க்கரை _11/2 கப்
ஏலப்பொடி _ சிறிது
நெய் _ 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை_ தேவைக்கு
செய்முறை: முள்ளங்கி பூசனியைக் கழுவி, தோல் நீக்கி, துருவி தண்ணீரை ஒட்ட பிழிந்து வைக்கவும்.
அடிகனமான வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சைகளை பொரித்து அதில் முள்ளங்கி, பூசணி துருவலைப் போட்டு, வாசனை போக நன்றாக, கருகாமல் வதக்கி எடுக்கவும்.
இத்துடன் சர்க்கரையை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும். பக்கங்களில் ஒட்டாமல் இறுகி வந்ததும், ஏலப்பொடி, மில்க் பவுடர் 1 ஸ்பூன் நெய் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியப் பின் துண்டுகள் போடவும்.
இந்த கேக் முள்ளங்கியின் வாடையின்றி மிருதுவாக சுவையாக இருக்கும்.