சோயா மில்க் டிலைட்!

சோயா மில்க் டிலைட்!
சோயா மில்க் டிலைட்!

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 100 கிராம், பால்-1 லிட்டர், சர்க்கரைத் தூள் - 250 கிராம், கஸ்டர்ட் பௌடர் - 2 டீஸ்பூன், வெனிலா எஸன்ஸ் - சில சொட்டுக்கள். முந்திரி, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்புகள் - தேவையான அளவு.

செய்முறை:

முதல் நாள் மாலையே சோயாபீன்ஸை ஊற வைக்கவும். இரவு ஒரு முறை தண்ணீரை எடுத்துவிட்டு புதுத் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையிலும் வேறு புதுத் தண்ணீர் ஊற்றி வைக்கவும். பருப்பு நன்றாக ஊறியதும் களைந்து, வெண்ணெய் போல அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவிற்கு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் விடவும். இப்போது அடியில் மாவு தங்கியிருக்கும். மேலே உள்ள நீரைக் கொட்டிவிட்டு, மாவை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். அரை தம்ளர் ஆறிய பாலில் கஸ்டர்ட் பௌடரைக் கரைத்துக்கொள்ளவும். முந்திரி, பிஸ்தா போன்ற பருப்புகளைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

காய்ச்சிய பாலில் பாதியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். சற்று சூடாக இருக்கும்போதே சோயாபீன்ஸ் மாவைக் கரண்டி கரண்டியாக எடுத்துக் கொட்டிக் கிளறவும். கட்டிகள் இல்லாமல் கிளறுவது அவசியம். ஒரு தட்டு மூடி வைத்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
நோய்த் தடுப்பாற்றலைத் தரும் குடிநீர் வகைகள்!
சோயா மில்க் டிலைட்!

மீதியுள்ள பாலைச் சுண்டக் காய்ச்சவும். சிறு தீயாக வைத்து,  அடிக்கடி கிளறி, அதிகமாக மலாய் (ஆடை) படியும்வரை சுண்டக் காய்ச்சவும். ஒரு கிண்ணத்தில் சோயா பீன்ஸ் பால், மலாய் பால், எஸன்ஸ், கஸ்டர்ட் பால், சர்க்கரைத் தூள், முந்திரி, பிஸ்தா 'துண்டங்கள் எல்லாவற்றையும் போட்டுத் தளரத் தளரக் கலக்கவும். நன்றாக ஆற விட்டு, ஃபிரிட்ஜ் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும். சுவையான ஐஸ்க்ரீம் தயார்.

சாதாரண கார்ன் பௌடரையோ அல்லது செயற்கையான ஐஸ்கிரீம் பௌடர்களையோ, உபயோகிப்பதைக் காட்டிலும், இந்த சோயா பீன்ஸ் உபயோகிப்பது சிறந்தது. இந்த சோயா மில்க்டிலைட் ஐஸ்க்ரீமில் புரதச் சத்து அதிகம் உள்ளது.

- அனுராதா சேகர்,

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com