காலை எழுந்ததும் அருமையான காபியுடன் தொடங்கும் அந்த நாள் முழுவதுமே இனிமையாக இருக்கும். காபி பிரியர்களுக்கு காபியின் மணமே நாடி நரம்புகளைச் சுண்டி இழுக்கும். காலை எழுந்தவுடன் காபி குடிக்காவிட்டால் சிலருக்கு அந்த நாளே நன்றாகப் போகாது வேலையில் ஈடுபடமுடியாமல் எரிச்சல்தான் வரும். காபி குடித்த உடனேயே காஃபின் காரணமாக உடலின் நரம்பு மண்டலம் உற்சாகமடைகிறது. அதனால் சுறுசுறுப்பு ஏற்படும்.
சிலர் காபிக்கு அடிமையாக இருப்பார்கள். காலை, மாலை, இரவு என எந்த நேரமும் காபியை விரும்புவார்கள். அவர்களுக்கு காபி இல்லாவிடில் வாழ்வில் சுவையும் இல்லை. சிலர் காபி ஃப்ளேவருடன் இருக்கும் கேக், பிஸ்கட் போன்ற உணவுகளை கூட மிகவும் விரும்பி உண்பர்
உணவுக்குப் பிறகு காபி குடிப்பது செரிமானத்திற்கு உதவும். காபியில் உள்ள காஃபின் செரிமானத்தை எளிதாக்குகிறது .மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அதே சமயம் அதிகமான காஃபின் நம் உடலுக்கு தீங்கை விளைவிப்பதாகும். .அதனால் காஃபின் குறைவாக உள்ள காபி வகைகளை தேர்ந்தெடுத்து அருந்தலாம். அந்த வகையில் சுவையும் சத்தும் தரும் சில வித்தியாசமான காபி வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அவகேடோ காபி என்பது காபி மற்றும் அவகேடோ பழத்தின் சுவையான கலவையாகும். இதில் காஃபின் குறைவாக உள்ளது லேசான கசப்பு சுவை மற்றும் அற்புதமான நறுமணம் உற்சாகத்தை தரவல்லது, உடலில் சேரும் அதிக கொழுப்பைக் குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது. காபி பொடியுடன் அவகேடோ பழம்,பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காபி இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளில் விரும்பி அருந்தும் ஒரு பானமாகும்.
காபி பொடியுடன் இஞ்சி , கோகோ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காபி விரைவான எடை குறைப்புக்கு உதவுகிறது. கோகோவில் உள்ள பாலிஃபீனால் எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது மற்றும் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கிறது.
காபி டிகாஷனுடன் பால்,சர்க்கரை,வெனிலா சிரப் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் வைத்து அதன் மேலே சிறிய கிண்ணத்தில் தேங்காய் பாலை வைத்து டபுள் பாய்லிங் முறையில் தேங்காய் பாலை சூடு செய்யவும். தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை, இன்ஸ்டன்ட் காபி பவுடர் போட்டு சூடு செய்த தேங்காய் பாலை கலந்து தயாரிக்கப்படும் தேங்காய் காபி மிகுந்த சுவையாக இருக்கும், சத்துக்கள் நிறைந்த இந்த காபி வயிற்றுக்கு இதமானதும் ஆகும்.
ஜின்செங் காபி, மசாலா காபி,சாக்லேட் காபி போன்ற காஃபின் குறைவாக உள்ள பல காபி வகைகள் உள்ளன. உடலுக்கு நல்ல பலன்களைத் தரும் காபி வகைகளைத் தேர்ந்தெடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.