தேங்காயில் பலகாரம் செய்வது என்றால் எளிமையாக செய்து விடலாம். ருசியும் அசத்தலாக இருக்கும். அதன் செய்முறை பற்றி இதோ:
தேங்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
சிவப்பு பச்சரிசி/சாதா பச்சரிசி - ஒரு கப்
துருவிய வெல்லம் -இரண்டு கப்
துருவிய தேங்காய்- ஒன்றரை கப்
பால் -இரண்டு கப்
ஏலப் பொடி- ஒரு டீஸ்பூன்
நெய்-4 டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா எல்லாமாக சேர்த்து பொடித்த கலவை -அரைகப்
செய்முறை:
அரிசியைக் கழுவி நன்றாக ஊற வைக்கவும் .பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும். பின்னர் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் இந்த அரைத்த கலவையை போட்டு பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைந்த தணலில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
கலவை நன்கு வெந்ததும் துருவிய வெல்லத்துடன் ஏலப் பொடியும், பாதாம், முந்திரி ,பிஸ்தா, வால்நட் சேர்த்து பொடித்த பொடியையும் சேர்த்து இடையிடையே நெய் விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். கலவை கெட்டியாக வந்து வாசனை தூள் கிளப்பியதும் நெய் தடவிய ட்ரேயில் இதைக் கொட்டி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் . அசத்தலான தேங்காய் அல்வா ரெடி. நிறைய நட்ஸ் வகைகள் சேர்ந்து இருப்பதால் ருசிக்கு சொல்லவே வேண்டாம்.
தேங்காய்ப்பால் தேன்குழல்:
தேவையான பொருட்கள்:
உளுந்து சேர்த்தரைத்து லேசாக வறுத்த தேன்குழல் மாவு-2கப்
சீனி- ரெண்டு கைப்பிடி
தேங்காய் பால் -ஒன்னரை கப்
எள்-1டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
ஜீனியை பாலில் நன்றாக கரைத்து வறுத்த மாவில் கலக்கவும். சிறிதளவு உப்பு மற்றும் எள் போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவை ரெடியாகி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் தேன்குழல் அச்சில் மாவை போட்டு பிழியவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும் தேன்குழலை எடுத்து வைக்கவும். வெள்ளை வெளேரென்ற தேங்காய்ப்பால் தேன்குழல் தயார். லேசான இனிப்பு சுவையுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி உண்பர்.