கேரள மாநிலத்தின் மலையோரப் பகுதி, வயல்வெளி மற்றும் புதர் பகுதிகளில் படர்ந்து கிடக்கும் ஒரு வகை கொடியில் பழுக்கும் பழமே பூச்சா பழம் என்பது. இதன் இலை, பழம் இரண்டுமே அடர்ந்த முடி வளர்ந்தாற்போல் புசுபுசுவென்றிருக்கும். சில காலத்திற்கு முன்பு வரை மிக அதிக அளவில் காணப்பட்ட இப்பழம் தற்போது அளவில் குறைந்து கொண்டு வருகிறது.
முந்தின தலைமுறையினருக்கு அவர்கள் தங்களின் பள்ளிப் பருவ காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் வழியில் கூஸ் பெரி, காரப்பழம், செரி கட்டாஸ், கோட்டப் பழம் மற்றும் பூச்சா பழங்களைப் பறித்து உண்டு வந்தது தற்போதும் ஞாபகத்தில் இருக்கலாம். பூச்சா பழத்திற்கு குரங்கு தின்னிப் பழம், அம்மம்மா பழம், குறுக்கன் பழம் என வேறு பல பெயர்களும் உண்டு. இதன் பூவின் தோற்றம் பேஷன் ஃபுரூட்டின் பூ போலவே இருக்கும். பழத்தின் சுவையும் பேஷன் ஃபுரூட்டின் சுவை போலவே இனிப்பும் புளிப்பும் கலந்ததாக இருக்கும்.
கூஸ் பெரி அளவிலான பூச்சா பழம் பழுக்கும் முன் பச்சை நிறத்திலும் நன்கு பழுத்த பின் வெள்ளை நிறத்திலும் தோற்றமளிக்கும். உள்ளே கருப்பு நிற பிசுபிசுப்பான கொட்டை இருக்கும். பூச்சா பழம் பல நோய்களைக் குணமாக்கக்கூடிய மருத்துவ குணம் கொண்டது. பல வகையான புரதச் சத்துக்கள், மினரல்கள், மைக்ரோ மினரல்கள், ஃபொலேட் போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதிலுள்ள மினரல்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக் கூடியவை.
ஆரம்ப காலங்களில் இப்பழம் கோயில்களில் வழங்கப்படும் சர்பத்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிறகு கால்நடையாகப் பயணம் மேற்கொள்பவர்கள், வழியில் சோர்வடையாமல் இருக்கவும், அயற்சியின்றி புத்துணர்வு பெறவும் இப்பழத்தை உட்கொண்டு வந்தனர். பெண்கள் கருத்தரிப்பில் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, உள்ளூர் மருத்துவர்கள் பூச்சா பழத்திலிருந்து டிகாஷன் தயாரித்து அருந்தும்படி அறிவுறுத்துவதும் உண்டு. மேலும், குழந்தைகளின் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இப்பழம் உதவும். இப்பழத்திலிருந்து கிடைக்கும் நன்மைகள் இயற்கையானவை; பக்கவிளைவுகள் உண்டுபண்ணாதவை. இப்பழத்தை ஆங்கிலத்தில் Cat Eye Ftuit (பூனைக் கண் பழம்) என்பர்.
பல்வேறு ஊட்டச் சத்துக்களும் மருத்துவ குணமும் கொண்ட இப்பழத்தை பூமியிலிருந்து அழிந்து விடாமல் பாதுகாப்பது அவசியம். பூச்சா பழத்தை ருசிக்க விரும்புவோர், ‘நன்கு பழுத்த பழங்களை உண்பதின் மூலம் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பில்லை’ என உங்கள் மருத்துவர் உறுதியளித்த பின் உட்கொள்வது நலம்.