
பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
வீட்டில் நெற்பொரி இருந்தால் அவற்றை பொரியல் வகை பதார்த்தங்களுக்கு தேங்காய்க்குப் பதிலாக தூவி இறக்கலாம். சுவையாக இருக்கும்.
உடனடியாக தோசை வார்க்கும் பொழுது கோதுமை மாவு ஒரு கப், ராகி மாவு ஒரு கப், அரிசி மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து தோசை வார்க்கலாம். மிகவும் மிருதுவாக இருக்கும்.
காரப் பலகாரங்கள் செய்யும்பொழுது மாவில் பிரண்டை நீர் விட்டு பிசைந்தால் பலகாரங்கள் காரல் கசப்பு இல்லாமல், சிவந்து போகாமல், வெடிக்காமல், பலகாரங்களை சுட்டெடுக்கலாம்.
பண்டிகை நாட்களில் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் வெங்காயத்தை துண்டாக்கி பச்சையாக சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
சேமியா, இடியாப்பம் போன்றவற்றில் சேவைகள் செய்யும் பொழுது பழுத்த தக்காளியை நன்றாக அரைத்து மற்ற மசாலாக்களுடன் இதையும் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, வெந்த சேமியா, நூடுல்ஸ், இடியாப்பத்தை சேர்த்துக்கிளற ஒரே சீரான, கலரான பார்ப்பதற்கு அழகாகவும், ருசியாகவும் இருக்கும் சேவைகள் கிடைக்கும்.
கறிவேப்பிலை குச்சியை பல்லில் கடித்து பிரஷ்போல ஆக்கிக் கொண்டு பல் துலக்க பயன்படுத்தலாம். உறுதியான சுத்தமான பற்கள் உறுதி.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது அதிகம் உப்பு அதிகம் சர்க்கரை இல்லாமல் கொடுக்கவேண்டும்.
பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. என்றாலும் சில நேரங்களில் ஜூஸாக்கி சாப்பிட விரும்புவோம். அப்பொழுது தேவையான அளவு பழத்தை ஜூஸ் ஆக்கி அதில் எதையும் கலக்காமல் இனிப்பு, உப்பு எதையும் கலக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.
ஆவி வந்ததும் வெயிட்டை போட்டு சமைப்பதை பழக்கம் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதனால் குக்கர் மூடியில் ஏதாவது அடைப்பு இருந்தால் வெளியேறிவிடும். பிறகு வெயிட்டை போட்டால் பயமில்லாமல் சமைக்கலாம்.
கொத்தமல்லித்தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
லட்டு வகைகள் பிடிக்க வராமல் இருந்தால் அதில் சிறிதளவு பால் சேர்த்து பிடிப்போம். அப்படி பிடித்தால் அந்த உருண்டைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் கெட்டுவிடும். சீக்கிரமாக அனைவருக்கும் கொடுத்து அதை தீர்த்து விடவேண்டும்.
லட்டு செய்ய பொரித்த பூந்தி, உடைந்த முறுக்கு வகைகள், எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதாவை திரட்டி கலகலா கொஞ்சம் செய்து வேர்க்கடலை, முந்திரி பருப்பு வறுத்து சேர்த்து கலந்துவிட்டால் அருமையான மிக்ஸர் கிடைத்துவிடும்.