உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருக்க ஒரு வழி?
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் அதன் சுவை அருமையாக இருக்கும்.
வெண்டைக்காய் முற்றிவிட்டால் அதை எவ்வாறு பயன்படுத்தலாம்?
வெண்டைக்காய் முற்றிவிட்டால் சீரான துண்டுகளாக வெட்டி வெயிலில் இரண்டு நாள் காய வைக்கவும். புளித்த மோரில் உப்பு, மிளகாய்த் தூள் போட்டு வெண்டைக்காயை இரண்டு நாள் ஊற வைத்து எடுத்துக்கொண்டால் தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
நான் ஸ்டிக் பேனில் திரட்டுப்பால் செய்தால் கிடைக்கும் பலன் என்ன?
நான்ஸ்டிக் பேனில் திரட்டுப்பால் செய்தால் பால் பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமும் இல்லை. ஓரங்களில் ஒட்டாது. கொதித்துக் குறையும் அளவு கூட அதிகமாக இராது. சாதாரண பாத்திரத்தில் செய்வதை விட திரட்டுப் பால் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
சுண்டல் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
சுண்டல் செய்து இறக்கி வைக்கும்போது சிறிது கசகசா, கடலைப்பருப்பு, பட்டை லவங்கம், மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சுண்டலின் சுவையே அலாதி தான்.
புளித்து விட்ட தோசை மாவில் ருசியான தோசை செய்ய முடியுமா?
தோசை மாவு புளித்து விட்டால், அரை கப் மாவில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, மாவில் சேர்த்து தோசை சுட்டால் தோசை புளிப்பு நீங்கி முறுகலாகவும், சுவையாகவும் இருக்கும்.
புதினா, கொத்தமல்லி சட்னி நிறம் மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
புதினா, கொத்தமல்லி சட்னி அரைக்கும் போது உப்பு போடாமல் அரைக்கவும். தேவைப்படும்போது எடுத்து உப்பு சேர்த்தால் சட்னி பச்சை நிறம் மாறாமலும், நல்ல ருசியுடனும் இருக்கும்.
பூரி, சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஒரு துவையல் எப்படி செய்வது?
பீட்ரூட் தோல், மிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல், சீரகம் இவற்றை வதக்கி அரைத்து துவையல் செய்தால் பூரி, சப்பாத்தி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலந்த சாதங்கள் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
தேங்காய் சாதம்,எலுமிச்சை சாதம் போன்ற கலந்த சாதங்கள் செய்யும்போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்துப் போட்டுக் கிளறினால் சுவை மிகுந்து இருக்கும்.
ஆவக்காய் ஊறுகாய் வேஸ்ட் ஆகாமல் இருக்க ஒரு வழி?
ஆவக்காய் ஊறுகாய் போடும்போது பெரிய துண்டுகளாகப் போடாமல், சிறு சிறு துண்டுகளாகப் போட்டால் வேஸ்ட்டாகாமல் இருக்கும்.
பூண்டு, வெங்காயம் போன்றவற்றை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர் நாற்றத்தை போக்க ஒரு வழி சொல்லுங்களேன்?
கத்தியில் சிறிதளவு உப்பை தடவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி விடும்.
தயார் செய்த மிக்சர், முறுக்கு போன்றவை நீண்ட நாள் மொர மொரப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
மிக்சர், முறுக்கு போன்றவற்றை டப்பாவில் போடும் முன்னர் பிளாட்டிங் பேப்பரை பரப்பி விட்டு பலகாரங்களை வைத்தால் அதிகப்படியான எண்ணையை அது உறிஞ்சி விடும். நீண்ட நாள் பலகாரங்கள் மொரமொரப்பாகவும் இருக்கும்.
காபி டிகாக்ஷன் கெட்டியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
காபி ஃபில்டரின் அடியில் சிறிதளவு உப்பு போட்டு அதன் மீது காபி பொடியைக் கொட்டி வெந்நீரை ஊற்றினால் டிகாக்ஷன் கெட்டியாக இருக்கும்.